

கரோனா சமயத்தில் பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பயனீட்டுச் சான்று கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமைஆசிரியர்களை அதிகாரிகள் வற்புறுத்துவதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பள்ளி மாணவிகளின் இடைநிற்றலை தடுக்க கடந்த 2008-ம் ஆண்டு பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. இத்திட்டத்தில் அரசு பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மூன்றாம் வகுப்பு பயில்வோருக்கு ரூ.500, ஆறாம் வகுப்புக்கு ரூ.1,000, ஏழைகளுக்கு மற்றும் 8-ம் வகுப்புக்கு ரூ.1,500, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ரூ.3,000 வழங்கப்படுகிறது.
இந்ததொகை நேரடியாக மாணவிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் 2019-20-ம் கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டநிலையில், அந்ததொகை மாணவிகளுக்கு சென்றதற்கான பயனீட்டுச் சான்றுகளை அனுப்ப வேண்டுமென தலைமைஆசிரியர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
கரோனா சமயத்தில் மாணவிகளிடம் விபரம் பெற்று பயனீட்டுச் சான்று வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடனடியாக சான்று வழங்குமாறு தலைமைஆசிரியர்களை அதிகாரிகள் வற்புறுத்துவதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி தலைமைஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தில் பலருக்கு உதவித்தொகை செல்லவில்லை. கரோனா சமயத்தில் உதவித்தொகை கிடைத்தது குறித்து மாணவிகளிடம் விபரம் பெறுவதிலும் சிக்கல் உள்ளது.
மேலும் மாணவிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செல்வதால், வங்கி மூலமே சரிபார்க்க முடியும். இந்த சமயத்தில் வங்கிகளுக்கு செல்வதிலும் சிரமம் உள்ளது.
இதனால் வங்கிகள் மூலமே அதிகாரிகள் பணம் சென்றதை உறுதி செய்து கொள்ள வேண்டும், என்று கூறினர்.