ஊழியருக்கு கரோனா: கோவில்பட்டி அஞ்சலகம் மூடப்பட்டது

கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் நகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் நகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
Updated on
1 min read

கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் பணியாற்றிய ஊழியருக்கு கரோனா தொற்று பாதிப்பு காரணமாக அலுவலகம் மூடப்பட்டது.

கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் 30 வயது இளைஞர் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டிக்கு வந்து செல்வது வழக்கம்.

இவர் 27-ம் தேதி கோவில்பட்டி அலுவலகத்துக்கு வேலைக்கு வந்துள்ளார். 28-ம் தேதி அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவர் தூத்துக்குடியில் கரோனா பரிசோதனை செய்துள்ளார்.

இதில், நேற்று மாலையில் அந்த இளைஞருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள் அலுவலக வளாகத்துக்குள் நின்றிருந்தனர். பின்னர் காலை 11 மணிக்கு கோவில்பட்டி நகராட்சி பணியாளர்கள் தலைமை அஞ்சலக அலுவலகத்துக்கு வந்து கிருமி நாசினி தெளித்தனர்.

மேலும், அஞ்சலக அலுவலகமும் மற்றும் அதன் முதல் மாடியில் செயல்பட்டு வரும் கோட்ட அலுவலகமும் மூடப்பட்டன. அலுவலகம் 48 மணி நேரம் மூடப்பட்டிருக்கும், அதன் பின்னர் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், கடந்த 28-ம் தேதி கோவில்பட்டி நகராட்சி சார்பில் காந்தி மைதானத்தில் செயல்படும் தற்காலிக தினசரி சந்தை வியாபாரிகள், ஊழியர்கள் மற்றும் ஏற்கெனவே நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என சுமார் 350 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், தற்காலிக சந்தை வியாபாரிகள் 4 பேர் உள்ளிட்ட 7 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், தற்காலிக தினசரி சந்தையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in