

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாகர்கோவில் எம்.பி. வசந்தகுமார் வாகனத்தை கயிறு கட்டி இழுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மகளிர் காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தைத் தொடங்கி வைத்த வசந்தகுமார் எம்.பி., மோட்டார் சைக்கிளை கயிறு கட்டி இழுத்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் அருள் சபீதா, மற்றும் திரளானோர் மோட்டார் சைக்கிளை இழுத்துச் சென்றவாறு கோஷமிட்டனர்.
போராட்டத்தில் பேசிய வசந்தகுமார் எம்.பி., பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்து ஏழை, மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக கூறினார்.