

சுப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெறுவதற்கு திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் திருமணம் உட்பட எந்தவொரு சுப நிகழ்ச்சிக்கும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெறுவது அவசியம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, திருமண விழாவுக்கு அனுமதி பெற மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று விசாரித்தபோது, யாரை அணுக வேண்டும் என்றும், அதன் நடைமுறைகள் குறித்தும் யாருக்கும் தெரியாததால் அலைக்கழிக்கப்படுவதாகப் புகார் கூறுகின்றனர்.
இது தொடர்பாக திருமண விழாவுக்கு அனுமதி பெறச் சென்ற ஒருவர் கூறும்போது, "திருமண விழாவுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெறச் சென்றபோது, யாரை அணுக வேண்டும் என்று அலுவலக வரவேற்பாளருக்கே தெரியவில்லை. இதையடுத்து, அலுவலகத்தில் விசாரித்ததன் அடிப்படையில் முதலில் உதவி ஆணையரையும் அடுத்தடுத்து நகரப் பொறியாளரையும், மாநகராட்சி ஆணையரையும் அணுகியும் இதுவரை பதில் கிடைக்கவில்லை.
கரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையிலும், பல்வேறு குடும்பச் சூழல்களால் தவிர்க்க முடியாத காரணத்தாலேயே திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் கரோனா வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றத் தயாராக இருந்தும் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை. ஓரிரு நாட்களாக அலைக்கழிக்கப்பட்டதுதான் மிச்சம்" என்றார்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியனிடம் கூறுகையில், "மாநகரில் அண்மையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் 50 பேருக்கும் அதிகமானோருக்குக் கரோனா தொற்று உறுதியானது. எனவேதான், எந்தவொரு சுப நிகழ்ச்சிக்கும் அனுமதி பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.
திருமண மண்டபங்கள் தற்போது மூடப்பட்டுள்ள நிலையில், வீட்டில்தான் நிகழ்ச்சிகளை வைக்க முடியும். நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து வீடுகளும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் அளவுக்கு விசாலமானதாக இருக்கும் என்று கூற முடியாது.
இப்போதைய சூழலில் அறிகுறிகள் இல்லாமலேயே கரோனா பரவி வருகிறது. எனவேதான், சுப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரும்போது, மாநகராட்சி அலுவலர்கள் மூலம் அந்த வீடோ அல்லது இடமோ நிகழ்ச்சி நடத்த ஏற்றதாக உள்ளதா என்று ஆய்வு செய்து, அதன்பிறகே அனுமதியோ அல்லது நிராகரிப்போ செய்யப்படும்.
அனுமதி அளித்தாலும் கரோனா பரவலைத் தடுக்க அரசு கூறியுள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் முறையாகப் பின்பற்ற வேண்டும். இப்போதைய நிலையில், கரோனா பரவலின் தீவிரத்தை உணர்ந்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் அனைத்துவித நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்ததாக இருக்கும்" என்றார்.
திருச்சியில் சுபநிகழ்ச்சிகளுக்கு மாநகராட்சி ஆணையரிடமே அனுமதி பெற வேண்டும் என, மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.