

கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவில் வந்தாலும் ஒருவாரம் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியும் தொடர் நிகழ்வுகளில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்று வருகிறார்.
புதுச்சேரியில் முதல்வர் அலுவலக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதியாகி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் முதல்வர் அலுவலகம் மூடப்பட்டது. அத்துடன் முதல்வரின் பாதுகாவலாரன 'கன் மேன்' ஒருவரின் தந்தைக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமிக்கு கரோனா தொற்றில்லை என்று முடிவு நேற்று (ஜூன் 29) வந்தது.
அதைத்தொடர்ந்து, சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், தற்போதுள்ள சூழலில் குறைந்தபட்சம் ஒரு வார காலத்துக்கு முதல்வரை தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது" என்று தெரிவித்தார்.
ஆனால், முதல்வர் நாராயணசாமி நேற்றே கள ஆய்வுக்குச் சென்றார். குறிப்பாக, கரோனா பாதிப்பு அதிகமுள்ள மண்ணாடிப்பட்டு தொகுதிக்குச் சென்று, அங்குள்ள கட்டுப்பாட்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து, வீட்டிலேயே தனது அலுவலக பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இந்நிலையில், புதுச்சேரி திருக்காஞ்சிக்கு சென்று யாகத்தில் இன்று (ஜூன் 30) பங்கேற்றார்.
கரோனா தொற்று நீங்கவும் மக்களுக்கு மரணபயத்தைப் போக்க மஹா மிருத்யுஞ்ஜய மந்திரங்கள் முழங்க புதுச்சேரி திருக்காஞ்சியில் சிறப்பு யாகம் நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி இந்த யாகத்தில் பங்கேற்று தொடங்கி வைத்தார்.