

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கோவை பெரியகடை வீதியில் மாநகராட்சி பிரதான அலுவலகம் உள்ளது. இங்கு ஆணையர், துணை ஆணையர், நகர் நலப் பிரிவு, வருவாய்ப் பிரிவு, நகரமைப்புப் பிரிவு, தூய்மை பாரதம் திட்டப் பிரிவு, ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் பிரிவு, பொறியியல் பிரிவு உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறும் பிரிவு போன்றவை உள்ளன.
சான்றிதழ் பெற, கட்டிட அனுமதி எண் பெற, அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக தினசரி ஏராளமான பொதுமக்கள் பிரதான அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர். அலுவலகப் பணிகள் தொடர்பாக, மண்டல அலுவலகங்களில் இருந்து அதிகாரிகள், ஊழியர்களும் பிரதான அலுவலகத்துக்கு வந்து செல்கி்ன்றனர்.
கடந்த மார்ச் முதலே கரோனா தொற்று பரவல் இருந்தாலும், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பொதுமக்கள் தடையின்றி அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், கோவை மாநகரில் தற்போது பரவல் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்துக்குள் பொதுமக்கள் நுழைய இன்று (ஜூன் 30) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தின் முதல் மற்றும் 2-வது நுழைவுவாயில்கள் மூடப்பட்டுள்ளன. 3-வது நுழைவுவாயில் மட்டும் திறக்கப்பட்டு, அதன் வழியாக மாநகராட்சி அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனைக்கு பின்னர் அனுமதி
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "மாநகராட்சி ஆணையர் உத்தரவைத் தொடர்ந்து மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பொதுமக்கள் நுழைய இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழையும் பகுதியில் 2 பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் பாதையில் ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். உள்ளே வரும் ஊழியர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டு, அதில் காட்டப்படும் வெப்ப நிலையை பொறுத்தே அனுமதிக்கப்படுகின்றனர்.
இரண்டாவதாக, நுழைவுவாயிலில் இருந்து பிறப்பு, இறப்பு சான்று வாங்கும் பகுதி வரை பாதை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்று வாங்கும் அறைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அங்குள்ள மாநகராட்சி ஊழியர்களிடம் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் கோரிக்கை மனுக்கள், கட்டிட அனுமதி பெற விண்ணப்பிக்கும் ஆவணம், வரி புத்தகம் பெற விண்ணப்பிக்கும் ஆவணம் ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டும்.
அந்த ஊழியர்கள் அந்த ஆவணங்களை வாங்கி சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஒப்படைத்து விடுவர். ஊழியர்களிடம் மனுக்கள், ஆவணங்களை ஒப்படைத்த பின்னர் பொதுமக்கள் அதேபாதையில் திருப்பி வெளியே அனுப்பப்படுகின்றனர். உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றால் செல்போன் மூலம் பேசிக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது" என்றனர்.
பொதுமக்கள் அதிருப்தி
அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கூறும்போது, "வழக்கமாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் மாநகராட்சி அதிகாரிகள் செல்போன் அழைப்பை எடுக்க மாட்டார்கள். நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டிய நிலை இருந்தது. கட்டிட அனுமதி எண் பெற, நேரில் சென்று அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து விண்ணப்பித்தால் தான் குறைகள் கண்டறிந்து விரைவில் எண் பெற பயனுள்ளதாக இருக்கும். வரி புத்தகம் பெற விண்ணப்பிக்கவும் இதே நிலை தான்.
இந்தச் சூழலில் அதிகாரிகளை சந்திக்க, பிரதான அலுவலகத்துக்குள் மக்கள் நுழைய தடை என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அரசு அலுவலகத்துக்குள் பொதுமக்கள் வர தடை விதிக்கப்படுவது என்பது ஏற்புடையது அல்ல. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட இவ்வளவு கட்டுப்பாடுகள் இல்லை. அதற்கு பதில் பிரதான அலுவலகத்துக்குள் வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதித்து, கைகளை கழுவிய பின்னர் உள்ளே அனுமதிக்கலாம். இதை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதை பரிசீலிக்க வேண்டும்" என்றனர்.