

சாத்தான்குளம் தந்தை, மகன் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை தற்காலிகமாக சிபிசிஐடி விசாரிக்கும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை அறிவித்துள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்துப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.
நீதித்துறை நடுவர் நடத்திய விசாரணைக்குப் போதிய ஒத்துழைப்பு வழங்க மறுத்தது, நீதித்துறை நடுவரை தவறாகப் பேசியது, நீதித்துறை நடுவர் விசாரணையை வீடியோவில் பதிவு செய்தது போன்ற காரணங்களுக்காக தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக இன்று உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூவரும் நேரில் ஆஜராகினர். நெல்லை சரக ஐஜி பிரவீன் குமார் மற்றும் தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் ஆகியோரும் ஆஜராகினர்.
அவமதிப்பு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை சிபிஐ தொடங்கும் வரை காத்திருக்காமல் ஏன் நெல்லை சரக டிஐஜி விசாரிக்கக் கூடாது என வினவினர்.
சிறிய இடைவேளைக்குப் பின்னர் நீதிமன்றம் கூடியபோது அரசு தரப்பிலிருந்து நீதிமன்ற யோசனையை ஏற்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
நெல்லை சரக டிஜஜி பிரவீண் குமார் அபினவ் வழக்கு விசாரணையை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், சிபிஐ வழக்கை விசாரிக்கும் வரை நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் விசாரிப்பார் என அறிவித்தனர். நெல்லை சரக டிஐஜி-க்கு பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய பொறுப்பு இருக்கும் என்பதால் இவ்வாறு தெரிவித்தனர். இந்த வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.