Published : 30 Jun 2020 02:29 PM
Last Updated : 30 Jun 2020 02:29 PM

கோவை ரத்தினபுரி பள்ளிச் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் : மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு

கோவை ரத்தினபுரியில் கடந்த 10 நாட்களுக்கு முன் டிபன் கடை நடத்திவந்த தம்பதியரிடம் கடையை மூடச்சொல்லி போலீஸார் வலியுறுத்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களது 16 வயது மகனை போலீஸார் தாக்கினர். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டிபன் கடைகள் இரவு 8 மணிக்குள் அடைக்கப்பட வேண்டும் என விதி உள்ளது. இந்நிலையில் கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில், ஒரு தம்பதியர் தள்ளுவண்டிக் கடை நடத்தி வந்தனர். அவர்களது 16 வயது மகனும் பெற்றோருக்குத் துணையாக டிபன் கடையில் வியாபாரம் செய்து வந்தார்.

கடந்த 17-ம் தேதி இரவு அங்கு ரோந்துப் பணிக்கு வந்த போலீஸ் எஸ்.ஐ. செல்லமணி தலைமையிலான போலீஸார் அவர்கள் கடையை மூடுமாறு வலியுறுத்தினர். ''சார். இப்போதான் வந்தோம், 2000 ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளேன். கொஞ்சம் வியாபாரம் ஆனவுடன் போய் விடுகிறேன்'' என அந்தப் பெண், போலீஸாரிடம் தெரிவித்தார்.

போலீஸார் அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸாரின் இந்தச் செயலை சிறுவன் தனது செல்போனில் படம் பிடித்தார். இதைப் பார்த்த எஸ்.ஐ. செல்லமணி சிறுவனிடமிருந்த செல்போனைப் பிடுங்கிக்கொண்டு காவல் நிலையத்துக்கு வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என மோட்டார் சைக்கிளில் கிளம்பத் தயாரானார். சிறுவன் தனது செல்போனை பிடுங்கிச் செல்கிறாரே என ஒரு வேகத்தில் அவரது பைக் சாவியைப் பறிக்க பிரச்சினை பெரிதானது.

கடும் கோபமடைந்த எஸ்.ஐ. மற்றும் போலீஸார் சிறுவனைத் தடியால் தாக்கினர். மகனைக் காப்பாற்ற போலீஸாரிடம் தாயும் தந்தையும் கெஞ்சினர். ஆனால், அதைக் கண்டுகொள்ளாத போலீஸார் சிறுவனைத் தடியால் தாக்கினர். போலீஸ் தடியடியில் இருந்து காக்க தாய் கெஞ்சியபடி சிறுவனை அணைத்து அந்த அடியைத் தான் வாங்கிக்கொண்டார்.

சிறுவனும் பயந்துபோய் தாயின் பின்னே ஒளிந்துகொண்டார். ஆனால், சிறுவனைத் தாக்கி காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்வதில் போலீஸார் குறியாக இருக்க, சட்டை கிழிந்து சிறுவன் நிற்க, அருகிலிருந்த சிலர் போலீஸாரிடம் தயங்கியபடி சமாதானம் பேச முற்பட்டனர். போலீஸார் அவர்களை விரட்டிவிட்டு சிறுவனைத் தனியாக காவல் நிலையத்துக்கு போலீஸ் ஜீப்பில் அழைத்துச் சென்றனர்.

இந்தக் காட்சி காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கண்டித்தனர்.

குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர்களும் இச்சம்பவத்தைக் கண்டித்தனர். இந்நிலையில் சிறுவனைக் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸார் சிறுவனைக் கைது செய்ய சட்டத்தில் இடமில்லாததால் விடுவித்தனர்.

சிறுவர்களைச் சீருடை அணிந்த போலீஸ் விசாரிக்கக் கூடாது, ஜீப்பில் ஏற்றக் கூடாது, காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லக் கூடாது, தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் மட்டும்தான் சிறுவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முடியும் என சட்டம் உள்ள நிலையில் இந்தப் பிரச்சினை குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து (SUO-MOTO) வழக்குப் பதிவு செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாநில மனித உரிமை ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில், “சிறுவன் தாக்கப்பட்டது குறித்து கோயம்பத்தூர் பதிப்பு தனியார் ஆங்கில நாளிதழ் செய்தி அடிப்படையிலும், காணொலியைக் கண்டதன் அடிப்படையிலும் கோவை மாநகர காவல் ஆணையர் இதுகுறித்த விரிவான அறிக்கையை 2 வார காலத்திற்குள் அனுப்பவேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x