Last Updated : 30 Jun, 2020 01:45 PM

 

Published : 30 Jun 2020 01:45 PM
Last Updated : 30 Jun 2020 01:45 PM

ஊரடங்கால் வேலை இழப்பு; முறுக்கு வியாபாரம் செய்யும் நெய்வேலி உதவிப் பேராசிரியர்

ஊரடங்கால் வேலையை இழந்த நெய்வேலியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர், சுயதொழிலாக முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி 25-வது வட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (30). திருமணமான இவருக்கு 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பொறியியல் பட்டதாரியான இவர், கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக கடந்த 5 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். சம்பளமாக ரூ.25 ஆயிரம் பெற்று வந்தார்.

இந்த நிலையில், கரோனோ வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு சொந்த ஊருக்கு வந்தார் மகேஸ்வரன். ஊரடங்கு உத்தரவு தளர்வு வரும், மீண்டும் வேலைக்குச் செல்லலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் ஊரடங்கு தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனால் அவர் பணிக்கு மீண்டும் திரும்ப முடியவில்லை. இந்தக் காலகட்டத்தில் கல்லூரி நிர்வாகமும் இவருக்குச் சம்பளம் வழங்கவில்லை.

மேலும், கல்லூரியில் மீண்டும் பணிக்குச் சேர வேண்டுமென்றால் 10 மாணவர்களை அழைத்து வந்து கல்லூரியில் சேர்த்தால் சம்பளம் தர முடியும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவர், பல்வேறு கல்லூரிகளில் வேலைக்கு முயற்சி செய்தும் ஊரடங்கால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

இதனால் வெறுத்துப்போன அவர், தனது சொந்த ஊரிலேயே சுயதொழில் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார். என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தபோது, வீட்டில் அவரது மனைவி முறுக்கு சுட்டு அவருக்குக் கொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்ட அவர், அது தனி ருசியாக இருந்ததால் இதை எப்படிச் செய்தாய் என்று அவரிடம் கேட்டு, அதேபோல் செய்து தனது தந்தை நடத்திவரும் காய்கறிக் கடையில் வைத்து விற்று வருகிறார்.

காய்கறிக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் இந்த முறுக்கை வாங்கிச் சென்றனர். முறுக்கின் ருசி அவர்களுக்குப் பிடித்துப் போய் மீண்டும், மீண்டும் வாங்கத் தொடங்கினர். அதேபோல், அவரது வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் வாங்க ஆரம்பித்தனர். நிறைய வாடிக்கையாளர்கள் இந்த முறுக்கை வாங்க ஆரம்பித்தனர். இதனால் அவருக்கு சுயதொழில் செய்யலாம் என்று நம்பிக்கை வந்து தொடர்ந்து முறுக்கு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து மகேஸ்வரன் கூறுகையில், "சுயதொழில் செய்வதால் எனக்கு மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி கிடைக்கிறது. தற்போது நாளொன்றுக்கு நான்கு கிலோ முறுக்கு விற்பனையாகிறது. இதில் ரூ.800 வரை கிடைக்கிறது. செலவு போக ரூ.500 லாபம் கிடைக்கிறது. இது எனது குடும்பத்துக்குப் போதுமானதாக உள்ளது. ஊரடங்குத் தளர்வு ஏற்பட்டால் வியாபாரத்தை நெய்வேலி பகுதி முழுக்க விரிவுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறேன். ஊரடங்கால் வேலை இழந்தவர்கள், சோர்ந்துவிடாமல் தனக்குத் தெரிந்த ஏதாவது ஒரு வேலையைச் செய்து தனது வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x