கரோனா வைரஸ்: 24 மணிநேரக் கட்டுப்பாட்டு அறையின் மூலம் 1.47 லட்சம் பேர் பயன்; அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்
அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொடர்பான 24 மணிநேரக் கட்டுப்பாட்டு அறையின் மூலம் 1.47 லட்சம் நபர்கள் பயன்பெற்றுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று (ஜூன் 30) அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழக அரசு, முதல்வர் தலைமையில் தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படக்கூடிய அவசரகால கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையில் தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி ஆகிய பிற மொழி பேசும் சுகாதாரப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு ஒருநாளைக்கு சுமார் 2,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் தொலைபேசி மூலம் வழங்கி வருகிறது. இந்தக் கட்டுப்பாட்டு அறையின் கீழ் 10 பிரிவுகள் இயங்கி வருகின்றன.

பொதுமக்கள் இம்மையத்தினைத் தொடர்புகொண்டு கரோனா நோய் பற்றி எழும் சந்தேகங்களையும், தடுப்பு நடவடிக்கை பற்றிய விவரங்களையும், சிகிச்சை முறைகள் பற்றியும் தொலைபேசி வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். மேலும், ஒரு சுழற்சிக்கு 2 நபர்கள் வீதம் மனநல ஆலோசகர்கள் பணியமத்தப்பட்டு ஆலோகனைகளை வழங்கி வருகிறார்கள். மனநல ஆலோசனைகளை விரும்பும் பொதுமக்கள் 104 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளைப் பெறலாம்

இந்த அவசரகால கட்டுப்பாட்டு அறையுடன் கட்டணமில்லா தொலைபேசிகள் 044-29510400 / 044-29510500 / 044-29510300 / 044-46274446, கைபேசி: 9444340496 / 8754448477 என்ற எண்கள் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இந்த பிரத்யேக கட்டுப்பாட்டு அறை, இதுவரை பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 1 லட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை திறமையாகக் கையாண்டு கரோனா தடுப்பு மற்றும் மேலாண்மை பணிகளை மிகச் சிறப்பாக தொடர்ந்து வருகிறது"

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in