

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் 17 பேர், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் ஆவர்.
இந்த நிலையில், மருத்துவப் பணியாளர்களில் மேலும் பலருக்கு நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்களுக்கு ‘என் - 95 மாஸ்க்’ உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நாகை மாவட்ட ஆட்சியர், நாகை மருத்துவக் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோருக்கு சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
''கரோனா நோய்த்தொற்றால் நாகை மாவட்டத்தில் ஒரு உயிரிழப்புகூட ஏற்படாமல் பாதுகாத்தமைக்காக ஆட்சியர், மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட அத்தனை முன்களப் பணியாளர்களுக்கும் மனம் திறந்த பாராட்டுகளையும் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதேசமயத்தில் தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணியில் முன்களப் பணியாளர்களாகக் களத்தில் நின்றவர்களில் 17 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளானது நாகை மாவட்ட அரசு ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நம்மைப் பாதுகாக்க வேண்டிய அரசு ஊழியர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியிலும், மருத்துவமனையை நாடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே, தாங்கள் தலையிட்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்து முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுகின்றோம். நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் நோய் அறிகுறிகள் இல்லாத பாசிட்டிவ் நோயாளிகளை மருத்துவமனை வளாகம் தவிர்த்து வேறு இடங்களுக்கு உடனடியாக மாற்ற, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனையில் பணியாற்றும் அனைவருக்கும் வேறுபாடு இல்லாமல் என்95 மாஸ்க் மற்றும் கையுறைகளைத் தேவையான அளவில் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்கள், அவுட்சோர்சிங் பணியாளர்கள் உட்பட யாரையும் வேறு வகையான முகக் கவசம் அணிந்து பணியாற்ற எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. ( சிலரிடம் முகக்கவசத்தை வெயிலில் காயவைத்து திரும்பத் திரும்ப அதனையே உபயோகிக்க அறிவுறுத்தப்படுவதாகவும், சிலரிடம் உபயோகித்த முகக்கவசத்தைத் திரும்ப ஒப்படைத்தால் மட்டுமே புதிய முகக்கவசம் வழங்கப்படும் என அறிவுறுத்தப்படுவதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் வருகின்றன.)
அவசியமற்ற பார்வையாளர்களை மருத்துவமனைக்குள் அனுமதிப்பதைத் தடுக்க வேண்டும். அதேபோல் பல்வேறு வழியாக பொதுமக்கள் மருத்துவமனைக்கு உள்ளே வருவதையும் தடுக்க வேண்டும்.
கரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் தம் பணி நாட்களிலும், குவாரன்டைன் காலத்திலும் தங்குவதற்கு உரிய வகையில் ( தனித்தனிக் கழிவறை மற்றும் குளியலறை வசதியுடன்) தங்க ஏற்பாடு செய்து தர வேண்டும். ஒரு வாரம் பணி மற்றும் ஒரு வாரம் குவாரன்டைன் எனக் குறைந்தபட்சம் 14 நாட்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஓரளவிற்கேனும் அவர்கள் விரும்பும் உணவை வழங்கிட உரிய ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்''.
இவ்வாறு அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.