

நடப்பு காரிஃப் பருவத்திற்கான பயிர்க் காப்பீடு செய்யுமாறு, விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016-17 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பருவத்திலும் வட்டாரத்திற்கேற்ற பயிர்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றில் சாகுபடி செய்ய உள்ள பயிர்களை விவசாயிகள் காப்பீடு செய்து இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். இதன்படி காரிஃப் பருவத்தில் சாகுபடி செய்ய உள்ள பயிர்களைக் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.சித்ராதேவி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
“நெல், சோளம், மக்காச்சோளம், பருத்தி, துவரை, உளுந்து, பாசிப்பயறு, கொள்ளு, நிலக்கடலை, எள் ஆகிய வேளாண் பயிர்களைக் காப்பீடு செய்து கொள்ளலாம். இதேபோல் வாழை, மஞ்சள், மரவள்ளி, கத்தரி, தக்காளி, சின்ன வெங்காயம் போன்ற தோட்டக்கலைப் பயிர்களையும் காப்பீடு செய்து கொள்ளலாம்.
நெற் பயிருக்கு ரூ.621, சோளத்துக்கு ரூ.209, மக்காச்சோளத்துக்கு ரூ.588, பருத்திக்கு ரூ.459, நிலக்கடலைக்கு ரூ.578, எள்ளுக்கு ரூ.262, பயறு வகைப் பயிர்களுக்கு ரூ.331, வாழைக்கு ரூ.4,418, மஞ்சளுக்கு ரூ.3,973, மரவள்ளிக்கு ரூ.583, கத்தரிக்கு ரூ.1,095, தக்காளிக்கு ரூ.1,417, வெங்காயத்திற்கு ரூ.2,112 என்ற அளவில் ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு காப்பீட்டுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தகம், புகைப்படம் ஆகியவற்றுடன் இ-சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க் காப்பீட்டிற்கான பிரீமியம் தொகையைச் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.”
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.