

கரோனா வைரஸ் தடுப்புப்பணிகளில் ஊதியமின்றி பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப்பணியாளர்கள் மறுவாழ்வு சங்கத்தின் மாநிலத்தலைவர் தனராஜ் ஆட்சியர் அண்ணாதுரையிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
திமுக ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் சுமார் 13 ஆயிரத்து 500 பேர் கடந்த 2011-ம் ஆண்டு பணியிலிருந்து தமிழக அரசால் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் உடனடியாக மாற்றுப்பணி வழங்குமாறு கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுவை இறுதி விசாரணையாக எடுத்து விசாரிப்பதாக அறிவித்திருந்தது. எனவே, வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இச்சங்கத்தின் மாநிலத்தலைவர் தனராஜ் இன்று (ஜூன் 30) ஆட்சியர் அண்ணாதுரையிடம் அளித்த மனுவில், "10 முதல் 25 வருட அனுபவம் உள்ள மக்கள் நலப்பணியாளர்களை கரோனா வைரஸ் தடுப்புப்பணியில் ஊதியமின்றி தன்னார்வலராக பணியாற்ற விரும்புகிறோம். எனவே எங்கள் மனுவை பரிசீலனை செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.