தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு: உறுதியான வாய்ப்பாக பயன்படுத்தி கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்; வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கின் முழுமையான பயனை பெற மக்கள் அரசின் கோட்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 30) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக தமிழ்நாடு அரசு அறிவித்த 5-ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. மார்ச் 25 முதல் ஜுன் 30 வரை இடைப்பட்ட காலத்தில் அரசின் நடவடிக்கைகளால் தமிழக அரசு கரோனா பரவுதலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உரிய பல முயற்சிகளை மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அவர்களின் சிறந்த பணிகளோடும் இணைந்து மக்கள் ஆதரவோடு மேற்கொண்டது.

இருப்பினும் கரோனா தொற்று பரவுதல் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை. இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த நிலை நீடிக்கிறது. உலகலவில் வளர்ந்த நாடுகள் கூட கரோனாவை கட்டுப்படுத்த போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் தமிழக மக்கள் நலன் கருதி கரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பரவலை தடுக்க படிப்படியாக முற்றுப்புள்ளி வைக்க தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கை தமிழக அரசு கட்டுப்பாட்டோடும் அதே நேரத்தில் சில தளர்வுகளோடும் ஜுலை 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவித்து இருக்கிறது.

இந்த அவசியமான அறிவிப்பு என்பது மருத்துவர்கள், அதிகாரிகள் மற்றும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த கடுமையாக பணியாற்றிக்கொண்டு இருக்கின்ற பல்வேறு துறையினரோடும் கலந்து பேசி எடுக்கப்பட்ட முக்கியமான பயன் தரக்கூடிய முடிவாகும். எனவே, பொதுமக்களாகிய நாம் 6-ம் கட்ட ஊரடங்கை ஒரு உறுதியான வாய்ப்பாக பயன்படுத்தி கட்டுக்கோப்பாக செயல்பட்டு அரசு கோட்பாடுகளை முழுமையாக கடைபிடித்து கரோனாவை படிப்படியாக விரைவில் கட்டுக்குள் கொண்டுவர வழிவகுப்போம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in