

திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இ-பாஸ் இல்லாமல் தூத்துக்குடிக்குச் சென்று வந்தது சட்டத்துக்கு உட்பட்ட செயலா என அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ராயபுரம் பகுதியில் கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகளை மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் தம்பு செட்டி தெருவில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசங்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடிக்கு சென்று வந்துள்ளார்.
சென்னை மாநகராட்சியிடமோ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமோ அதற் கான அனுமதியை பெறவில்லை.
அவர் செய்தது சட்டத்துக்கு உட்பட்ட செயலா அல்லது சட்டத்தை மீறிய செயலா என்பதை விளக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் கோவில்பட்டி கிளைச் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தூத்துக்குடி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.