திமுக எம்எல்ஏ முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு

திமுக எம்எல்ஏ முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு
Updated on
1 min read

மதுரை பாஜக நிர்வாகியை தாக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை திமுக எம்எல்ஏ மூர்த்தி தனக்கு முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஜூலை 2-க்கு தள்ளி வைத்துள்ளது.

மதுரை பாஜக நிர்வாகியான சங்கரபாண்டியன், மதுரை கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ மூர்த்தி குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த எம்எல்ஏ மூர்த்தி கடந்த ஜூன் 22 அன்று தனது ஆதரவாளர்களுடன் சங்கரபாண்டியன் வீட்டுக்கு சென்று சங்கரபாண்டியன் மற்றும் அவரது மனைவியை காலணியால் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஊமச்சிகுளம் போலீஸார் எம்எல்ஏ மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி எம்எல்ஏ மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு முன்ஜாமீன் தரக்கூடாது என மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆட்சேபம் தெரிவித்தார். புகார்தாரரான சங்கரபாண்டியன் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதி, வழக்கை வரும் ஜூலை 2-க்கு தள்ளி வைத்து, அதுவரை மூர்த்தியைக் கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in