

மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 303 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது.
மதுரை மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டில் இல்லாததால் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்து 5-வது இடத்தில் உள்ள மதுரையில் கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித் துள்ளது.
நேற்று 303 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 2,298 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
கடந்த சில வாரங்களாக அரசு மருத்துவர்கள், மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தென் மாவட்டங்களில் மதுரையில் மட்டுமே கரோனா பரவல் வேகமும், உயிரிழப்பும் அதிகரிப்பதால் சுகாதாரத் துறை தினமும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரிடம் அன்றைய பாதிப்பு விவரங்களையும், அதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விசாரித்து வருகிறது.
அதனால், அவர்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.