Published : 30 Jun 2020 07:15 AM
Last Updated : 30 Jun 2020 07:15 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோளின்படி, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு முன்பு காங்கிரஸார் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணாநகரில் உள்ள வருவாய், ஜிஎஸ்டி மற்றும்கலால் வரி ஆணையர் அலுவலகம் எதிரில் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் க.வீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்பிக்கள் சு.திருநாவுக்கரசர், டாக்டர் ஏ.செல்லகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், "உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இல்லாதபோதும் மத்திய, மாநில அரசுகளின் அளவுக்கு அதிகமான வரியால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது’’ என்று குற்றம்சாட்டினார்.

சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ ராஜசேகரன் தலைமையில் திருவல்லிக்கேணி தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “21 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, ஞாயிறு மட்டும் விடுமுறை தந்து இன்று மீண்டும் விலைஉயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் கைகளில் பணம் இல்லை. இருக்கும் சொற்ப பணத்தையும் அரசு பிடுங்கிக் கொள்கிறது. மோடி அரசு ஏழை, நடுத்தர மக்களுக்கு விரோதமான அரசு என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வாணியம்பாடியில்...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு சார்பில் நூதனப் போராட்டம் நேற்று நடைபெற்றது. சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷா தலைமையில், அக்கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கோஷம் எழுப்பினர்.

பின்னர், வாணியம்பாடியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்குக்கு சென்ற காங்கிரஸ் கட்சியினர், அங்கு பெட்ரோல் நிரப்ப வந்தவாகன ஓட்டிகளிடம், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரூ.60 ஆகஇருந்த பெட்ரோல் விலை தற்போது ரூ.85 ஆக உயர்ந்துள்ளது. எனவே, நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்காக கொடுத்த ரூ.85-ல்ரூ.25-ஐ காங்கிரஸ் கட்சி சார்பில்திருப்பி கொடுப்பதாகக் கூறி, அங்கு வந்த 100 வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.25-ஐ அஸ்லாம் பாஷா திருப்பிக் கொடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x