Published : 30 Jun 2020 07:09 AM
Last Updated : 30 Jun 2020 07:09 AM

போலீஸார் - இளைஞரிடையே தள்ளு முள்ளு: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

ஊரடங்கு அமலில் உள்ள சென்னையில் 188 இடங்களில் போலீஸார் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனி பகுதி அருகில் உள்ள பிரபல ஜவுளிக்கடை அருகே மருந்தகத்தில் மாத்திரை வாங்கச் சென்ற இளைஞர் ஒருவரை வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார் மறித்துள்ளனர். அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், அவரை போலீஸாரின் வாகனத்தில் ஏற்றினர். அப்போது, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த வீடியோ வைரலானதால் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “சம்பந்தப்பட்ட இளைஞரின் பெயர் சதாம் உசேன். இவர் அமைந்தகரை, ஆசாத் நகரைச் சேர்ந்தவர். அவர் மருந்தகத்துக்கு செல்லவில்லை. ஊரடங்கை மீறியதற்காக அவரை மடக்கியபோது, அவர் எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், உங்களை எப்படி போலீஸார் விட்டனர் என அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மருத்துவரிடமும் தகராறில் ஈடுபட்டார். அவரது அடையாள அட்டையை பிடித்தும் இழுத்தார்.

சாலையில் பொது மக்கள் முன்னிலையில் அத்துமீறி நடந்து கொண்டதால் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றோம். பின்னர், அவரை விடுவித்து விட்டோம். நாங்கள் அத்துமீறலில் ஈடுபடவில்லை. உண்மையை விளக்க எங்களிடமும் வீடியோ உள்ளது” என்றனர். இந்த விவகாரத்தின் முழு உண்மைத் தன்மையை அறித்து கொள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x