

தமிழகத்தில் கடந்த ஆண்டில் 13 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.9,352 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள 4,449 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடந்த 2019-20-ம் ஆண்டு 13 லட்சத்து 2 ஆயிரத்து 412 விவசாயிகளுக்கு ரூ.9 ஆயிரத்து 352 கோடியே 13 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ரூ.11 ஆயிரம் கோடி கடன் வழங்க குறியீடுநிர்ணயிக்கப்பட்டு கடந்த ஜூன் 22-ம் தேதிவரை 73 ஆயிரத்து 552 விவசாயிகளுக்கு ரூ.580 கோடியே 84 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் டெல்டா பகுதிகளில் உள்ள 697 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கங்களில் கடந்த 22-ம் தேதி வரை 6 ஆயிரத்து 340 விவசாயிகளுக்கு ரூ.14 கோடியே 58 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் ஏப்ரல் 1 முதல் ஜூன் 19-ம் தேதி வரை 13 ஆயிரத்து 664 சிறு வணிகர்களுக்கு ரூ.41 கோடியே 42 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கி.பாலசுப்பிரமணியம், கூடுதல் பதிவாளர் கிரேஸ் லால் ரின்டிகி பச்சாவ், சிறப்பு பணி அலுவலர் க.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.