

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த19-ம் தேதி முதல் 30-ம் தேதி (இன்று) வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஓய்வூதியம்பெறுதல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வங்கிகள் நேற்றும், இன்றும் வழக்கமான சேவைகளுக்கு செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையில் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்துக்கு அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று வங்கிகள் திறந்தும்,சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வசிப்பவர்கள், இ-பாஸ் இல்லாததால் தங்கள் வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை செய்ய சென்னையில் உள்ள வங்கிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.