Last Updated : 29 Jun, 2020 09:45 PM

 

Published : 29 Jun 2020 09:45 PM
Last Updated : 29 Jun 2020 09:45 PM

சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு

கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த இருவரின் முதல்நிலை உடற்கூறு ஆய்வு அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் பதிவாளரிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த இருவரின் முதல்நிலை உடற்கூறு ஆய்வு அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் பதிவாளரிடம் வழங்க வேண்டும்

பதிவாளர் அதனை நகல் எடுத்து வைக்கவும், உண்மையான சான்றிதழை கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் வழங்கவும், அவர் அதை சிபிஐ விசாரணை அதிகாரியிடம் வழங்கவும் வேண்டும்

பல்வேறு ரசாயனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளும் (Chemical Analysis, Histopathological examination and Microbiological examination) ஆய்வுகளை செய்ய வேண்டியுள்ளது. அந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய இயலும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கிடைக்கும் முடிவுகளையும் பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரி முதல்வர், தூத்துக்குடி முதன்மை நீதித்துறை நடுவரிடம் வழங்க வேண்டும். முதன்மை நீதித்துறை நடுவர் அதனை சிபிஐ விசாரணை அதிகாரியிடம் வழங்கவும் வேண்டும்

மருத்துவர்களின் முடிவு தொடர்பான இறுதி அறிக்கையின் நகல் ஒன்றை நீதிமன்றத்திற்கும் அனுப்ப வேண்டும்.

தமிழக தடயவியல் துறை இயக்குனர் இந்த வி விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, ரசாயன சோதனைகள் தொடர்பான முடிவுகளை விரைவாக வழங்க வேண்டும்

கோவில்பட்டி நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கையையின் நகலை நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அதன் உண்மை அறிக்கையை பாதுகாப்பாக வைத்திருந்து சிபிஐ விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்

கோவில்பட்டி உதவி காவல் கண்காணிப்பாளர் இருவரின் மரணம் தொடர்பான வழக்கு குறிப்புகளை தூத்துக்குடி முதன்மை நீதித்துறை நடுவரிடம் வழங்கவும் முதன்மை நீதித்துறை நடுவர் அதனை சிபிஐ விசாரணை அதிகாரியிடம் வழங்க வேண்டும்.

பென்னிக்ஸ், ஜெயராஜ் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை தூத்துக்குடி முதன்மை நீதித்துறை நடுவரிடம் ஒப்படைக்க தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் அந்த ஆவணங்களை சிபிஐ விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையின் தடயங்களை சேகரிக்க சாத்தான்குளம் காவல்துறையினர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஆகவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வருவாய் அதிகாரிகளை நியமித்து அவர்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள தடயங்களைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், தடயவியல் துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள தடயங்களை விரைவாக சேகரிக்கவும் உத்தரவு.

அவ்வாறு தடயங்களை சேகரித்து கோவில்பட்டி நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு உதவ வேண்டும்.

தேவைப்படும் பட்சத்தில் நெல்லை தடயவியல் துறை நிபுணர்களின் உதவியையும் கோரலாம்.

காவல்துறையினருக்கு கவுன்சிலிங் வழங்குவதற்காக அவர்களின் நலனை கருத்தில் கொண்டு பெங்களூருவில் உள்ள NIMHANS மருத்துவ மையத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது முறையாக நடைமுறையில் உள்ளதா? என்பது குறித்து அரசு வழக்கறிஞர் நாளை நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x