Published : 29 Jun 2020 08:35 PM
Last Updated : 29 Jun 2020 08:35 PM

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: கோவில்பட்டி நகராட்சி பகுதியில் வீடு வீடாக உடல் நல பரிசோதனை

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவில்பட்டி நகராட்சிப் பகுதியில் வீடு வீடாகச் சென்று உடல் நல பரிசோதனை நடந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி உத்தரவின்பேரில் கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் ராஜாராம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் அனிதா ஆகியோரின் ஆலோசனையின் பேரில், நகர்நல செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், டெங்கு களப்பணியாளர்கள் மற்றும் நகராட்சி சுகாதாரப்பிரிவு பணியாளர்கள் கொண்டு 11 குழுக்களாக அமைத்து வீடு வீடாகச் சென்று உடல்வெப்ப பரிசோதனை மற்றும் உடல்நல கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கியது.

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட கடலைக்காரத்தெரு, செக்கடித்தெரு, தனுஷ்கோடியாபுரம் தெரு பகுதிகளில் கடந்த ஒரு வாரங்களில் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மேற்படி பகுதிகளில் வீடு வீடாக சென்று குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், கர்ப்பிணிகள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் நோய் உள்ளோர்களை கண்டறிந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி, மூச்சுத்திணறல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக நகர்நல மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல், கோவில்பட்டி நகராட்சி, மாவட்ட சித்த மருத்துவ பிரிவு மற்றும் ஹோமியோபதி பிரிவு சார்பில் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று கபசுர குடிநீர், ஹோமியோபதி சத்து மாத்திரை வழங்கும் பணியை நகராட்சி ஆணையாளர் திரு.ஓ.ராஜாராம் தொடங்கி வைத்தார்.

மேலும், கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி மூலம் 2 ஆயிரம் லிட்டர் நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் தயார் செய்யப்பட்டு நகராட்சி டெங்கு களப்பணியாளர்கள் மற்றும் சுகாதாரப்பிரிவு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ, அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் அபிநயா, ஹோமியோபதி மருத்துவர் வடகர்பீனா, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x