

சிசிடிவி ஆதாரங்கள் வெளிவந்த நிலையில் இரு அப்பாவிகளின் உயிர் பறித்த காவலர்கள் மீது 302-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என முதல்வருக்கு நான் நினைவூட்ட வேண்டுமா? முதல்வரின் பலவீனம் அதிர்ச்சியளிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்னர். பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தூத்துக்குடி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.
மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் கடையிலிருந்து அழைத்துச் செல்லும்போது இருவரும் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டனர். கீழே விழுந்து புரண்டனர் என போலீஸ் முதல் தகவல் அறிக்கையில் போட்டுள்ளதை மறுக்கும் வண்ணம் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதுகுறித்து இன்று (29-06-2020) திமுக தலைவர் ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
“இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுக்காக்க இன்னும் என்னென்ன செய்யப் போகிறீர்கள் @CMOTamilNadu? பதவியைத் தவறாகப் பயன்படுத்துபவர்களிடம் இருந்து மக்களைக் காக்க வேண்டிய முதல்வரே செயலற்று இருப்பது ஏன்? முதல்வரின் பலவீனம் அதிர்ச்சியளிக்கிறது. #JUSTICEFORJAYARAJANDBENNIX
#JAYARAJANDBENNIX இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன. கொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைது செய்ய வேண்டும் என @CMOTamilNadu-க்கு நான் நினைவூட்ட வேண்டுமா? #ArrestKillersOfJayarajAndBennix”.
இவ்வாறு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.