

நாளுக்கு நாள் அதி தீவிரமாகப் பெருகி வரும் கரோனாவைக் கட்டுப்பத்தும் பணியில் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். இவர்களை அனைவரும் பாராட்டினாலும்கூட ஒரு சிலரோ குறையாக விமர்சனம் செய்வதும் உண்டு.
இந்நிலையில், கரோனாவால் உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் உடலை அடக்கம் செய்தது குறித்து சமூக வலைதளத்தில் கந்தர்வக்கோட்டை சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.
அதன் விவரம்:
"கந்தர்வக்கோட்டை வட்டாரத்தில் அன்றைய (ஜூன் 27) கரோனா தடுப்புப் பணியை முடித்துவிட்டு வீட்டில் சற்றே அயர்ந்தபோது நள்ளிரவில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.
அப்போது, கந்தர்வக்கோட்டை பகுதியில் இருந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 13 வயதுச் சிறுவன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய அவர், சிறுவனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க இயலாது என்றும் அலுவலர்களே வந்து பெற்றுச் செல்லுமாறும் கூறினார்.
இந்தத் தகவல் அறந்தாங்கி சுகாதார துணை இயக்குநர் மூலம் மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும் உயர் அலுவலர்கள் சிலருக்கும் தெரிவிக்கப்பட்டது. பின்னர், உடலைப் பெற்று வருவது குறித்து சக பணியாளர்களோடு வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினருக்குத் தெரிவித்துவிட்டு மீண்டும் உறங்கலாமென்றால் பொழுது விடிந்துவிட்டது.
அதன்பிறகு, காவல் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரோடு நானும் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று உடலை வாங்கிக்கொண்டு பகட்டுவான்பட்டி மயானம் திரும்பினோம். இதற்கிடையில் ஊராட்சித் தலைவர் மூலம் பகட்டுவான்பட்டி மயானத்தில் சிறுவனின் உடலை அடக்கம் செய்யும் இடத்தில் குழி தோண்ட ஏற்பாடு செய்யப்பட்டது.
அங்கு, பொக்லைன் மூலம் குழி தோண்டியவர் சடலத்தைக் கண்டதும் தப்பித்தோம், பிழைத்தோம் என கருதியவாறு வாகனத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். சிறுவனுக்கு ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அந்த இடத்தில் நாங்கள் மட்டுமே.
குழியைச் சீரமைத்து, முறைப்படி அடக்கம் செய்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றோம். ஒவ்வொரு நாளும் உங்களுக்காக ஓடிக்கொண்டே இருக்கும் எங்களை உசாதீனப்படுத்தாதீர்கள்".
இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.
முத்துக்குமாரின் பதிவுக்கு பலரிடம் இருந்து பாராட்டுகள் குவிகின்றன. மேலும், அவரது பதிவு, வேகமாகவும் பகிரப்பட்டு வருகிறது.