

திருச்சி மாவட்டம் லால்குடி நகர் கிராமத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கடந்த 3 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ள நகர் கிராமத்தில் 1,000 ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும் சாகுபடிப் பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நகர் கிராமத்தில் கடந்த 3 நாட்களாக விவசாயத் தொழிலாளர்கள் 100-க்கும் அதிகமானோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நாற்று நடுதல், களை எடுத்தல், பூச்சி மருந்து தெளித்தல், உரம் தெளித்தல் உள்ளிட்ட விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, "வறட்சி, புயல், மழை, வெள்ளம் எனக் கடந்த 10 ஆண்டுகளாக இயற்கைப் பேரிடர்களால் விவசாயம் பாதிக்கப்பட்டது. நிகழாண்டு கரோனா ஊரடங்கால் வேலையாட்கள் கிடைக்காமல் விளைந்த பொருட்களைக் குறித்த நேரத்தில் அறுவடை செய்யவும், அறுவடை செய்ததை விற்கவும் முடியவில்லை. இதனால் கடுமையான இழப்பு நேரிட்டுள்ளது. பழைய கடன்களைக் கட்டினால்தான் புதிய கடன்கள் கிடைக்கும் என்ற நிலையில், பழைய கடன்களைக் கட்டவும் வழியின்றி தனியாரிடம் கடன் வாங்கித்தான் சாகுபடிப் பணிகளைத் தற்போது தொடங்கியுள்ளோம். இந்த நிலையில், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன" என்றனர்.
இது தொடர்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.பழனிசாமி கூறும்போது, "விவசாயத் தொழிலாளர்களுக்கு பிற கிராமங்களில் ஏக்கருக்கு சாதா நடவு செய்ய ரூ.3,000, கயிறு போட்டு நடவு செய்ய ரூ.3,500, ஒற்றை நாற்று நடவு செய்ய ரூ.4,000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நகர் கிராமத்தில் முறையே ரூ.2,200, ரூ.2,400, ரூ.3,000 மட்டுமே வழங்கப்படுகிறது.
ஒரு ஏக்கர் வயலில் ஒரு நாளைக்குள் நடவு செய்ய குறைந்தபட்சம் 10 முதல் 12 பேர் வரை ஆட்கள் தேவைப்படும் நிலையில், இந்தக் கூலி அவர்கள் வாழ்க்கை நடத்தப் போதுமானதாக இல்லை. எனவே, கூலியை உயர்த்தி வழங்கக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு மானியம், கடனுதவி, நிதியுதவி எனப் பல்வேறு நலத் திட்டங்களை அரசு செய்து வருகிறது. ஆனால், விவசாயத் தொழிலாளர்களுக்கு எதுவும் இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டுத் தீர்வு காணக் கோரியும், இயந்திரங்களையும், வெளியூர் ஆட்களையும் விவசாயப் பணிக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும் லால்குடி கோட்டாட்சியரிடம் வலியுறுத்தினோம். வட்டாட்சியர் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
கூலியை உயர்த்த நடவடிக்கை எடுக்காவிடில் ஜூலை 2-ம் தேதி லால்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளோம். இந்த விவகாரத்தில் தீர்வு கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும்" என்றார்.