

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளச்சாராயத் தொழிலைக் கைவிட்டு மனம் திருந்தி வாழ விரும்பிய 37 பேர் சொந்தமாக தொழில் செய்ய கறவை மாடுகள் வழங்கப்பட்டன. அதேபோல், இளைஞர்கள் அரசு, தனியார் வேலைக்குச் செல்ல ஏதுவாக நூலகம், உடற்பயிற்சிக்கூடமும் தொடங்கி வைக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்கள் திருந்தி வாழ விரும்பினால் அவர்களுக்கு சிறு தொழில்கள் தொடங்க அரசு நிதியுதவி அளித்து வருகிறது. அதன்படி, கறவை மாடு வளர்ப்பு, பெட்டிக்கடைகள் தொடங்கவும் ஏற்பாடு செய்யப்படும். இதன்மூலம் அவர்கள் மீண்டும் கள்ளச்சாராயத் தொழிலுக்குச் செல்லாமல் சொந்தத் தொழில்கள் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2019-20 நிதியாண்டின்படி தேர்வு செய்யப்பட்ட 144 பேரின் மறுவாழ்வுக்காக ரூ.43.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 37 பேருக்குக் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி பூட்டுத்தாக்கு அருகேயுள்ள நாராயணபுரம் கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இன்று (ஜூன் 29) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 37 பயனாளிகளுக்கான கறவை மாடுகளை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வழங்கினார். இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஐந்து பேருக்கு தலா ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மாட்டுக் கொட்டகைகள் அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டது.
நூலகம், உடற்பயிற்சிக்கூடம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாழைப்பந்தல் அருகேயுள்ள பொன்னம்பலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைமரங்கள் வளர்ந்துள்ளன. இங்கு வசிக்கும் சில குடும்பத்தினர் சட்ட விரோதமாக பனைமரங்கள் விற்கும் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கள் விற்பனையை ஒழிக்க கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட தொடர் சோதனையில் 40 பேர் கைது செய்யப்பட்டதுடன் 4 ஆயிரம் லிட்டர் பனைமரங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், பனைமர கள் விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் வேலைக்குச் செல்ல ஏதுவாக நூலகம் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை எஸ்பி மயில்வாகனன் இன்று தொடங்கி வைத்தார்.