கரோனா காலத்தில் சிறந்த பணி: திருச்சி டிஐஜி, இளம் மருத்துவருக்கு 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது

திருச்சி சரக டி.ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன், இளம் மருத்துவர் ஹக்கீம்
திருச்சி சரக டி.ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன், இளம் மருத்துவர் ஹக்கீம்
Updated on
1 min read

கரோனா காலத்தில் சிறப்பாகப் பணிபுரிந்ததாக திருச்சி சரக டிஐஜி வே.பாலகிருஷ்ணன், இளம் மருத்துவர் ஹக்கீம் ஆகியோருக்கு சர்வதேச அமைப்பு சார்பில் 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது வழங்கப்பட்டுள்ளது.

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வேர்ல்டு ஹூமானிட்டேரியன் டிரைவ் (WHD) என்ற சர்வதேச அமைப்பின் சார்பில் கரோனா காலத்தில் உலகம் முழுவதிலும் இருந்து சிறப்பாக பணியாற்றிய 100 பேர் கவுரவிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்தனர். அவர்களில் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் கரோனா காலத்தில் பொதுமக்களை அலையவிடாமல் ஆன்லைன் மூலம் குறை கேட்டு நடவடிக்கை மேற்கொண்ட திருச்சி சரக டி.ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவர்கள் பயன்படுத்தும் வகையில் பிரத்யேக முகக்கவசம் தயாரித்த திருச்சியைச் சேர்ந்த இளம் மருத்துவர் அ.முகமது ஹக்கீம் உள்ளிட்ட சிலரும் அடங்குவர்.

லண்டனில் உள்ள இந்த அமைப்பின் தலைமையகத்தில் நேற்று (ஜூன் 28) காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் மாதவ்குமார், கொசோவா நாட்டின் முன்னாள் அதிபர் பத்மிர் சேஜ்டியூ, வேர்ல்டு ஹூமானிட்டேரியன் டிரைவ் அமைப்பின் நிறுவனர் அப்துல் பாசித் சையத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது பெற்ற வே.பாலகிருஷ்ணன், ஹக்கீம் உள்ளிட்ட 100 பேரையும் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in