

சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் உட்பட 38 பேருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் ஆரம்ப நாட்களில் வெறும் 12 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். தொடர்ந்து வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர்.
ஏற்கெனவே 320-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று சிவகங்கை ஒன்றியக்குழுத் தலைவர், தேவகோட்டை வட்டாரவளர்ச்சி அலுவலர் ஒருவர், இளையான்குடி துணை வட்டாட்சியர், கூட்டுறவு ஊழியர் என 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இன்று மட்டும் ஒரே நாளில் 41 பேர் குணமடைந்தனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார். மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர்கள் மீனா, முகமது ரபீக் ஆகியோர் பங்கேற்றனர்.
ஜமாபந்தியை ரத்து செய்ய வலியுறுத்தல்..
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி துணை வட்டாட்சியருக்கு கரோனா தொற்று உறுதியானதால், வருவாய்த்துறையினர் அச்சமடைந்தனர். இதனால் ஜமாபந்தியை ரத்து செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நேற்று (ஜூன் 29) ஜமாபந்தி தொடங்கியது. இதற்காக ஒவ்வொரு வட்டத்திலும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரே இடத்தில் கூடும்நிலை உள்ளது. மேலும் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் 30-க்கும் மேற்பட்ட வருவாய் கணக்கு நோட்டுகளை அனைத்து ஊழியர்களும் தொட்டு கையெழுத்திட வேண்டியுள்ளது.
இரு வாரங்களாக சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் வட்டாரவளர்ச்சி அலுவலர், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஜமாபந்தியை ரத்து செய்ய வேண்டுமென, வருவாய்த்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்திக்காக 3 நாட்களாக துணை வட்டாட்சியர் பணிபுரிந்துள்ளார். தற்போது அவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவருடன் பணிபுரிந்த மற்ற ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையடுத்து மதுரை மாவட்டத்தை போன்று சிவகங்கை மாவட்டத்திலும் ஜமாபந்தியை ரத்து செய்ய வேண்டும். மேலும் வருவாய்த்துறையைச் சேர்ந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை எடுக்க வேண்டும், என்று கூறினர்.