

கரோனா தொற்றுக்கென பிரத்யேக மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், அலோபதி, சத்தான உணவு, சித்த மருத்துவ முறையிலான சிகிச்சையின் வாயிலாக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றன அரசு மருத்துவமனைகள்.
ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட நபர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து, புதிதாக நோய் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலுத்தினால் ,அவர்கள் நோயில் இருந்து மீண்டுவர அது நல்ல பலன் தருவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். ஒருவரிடம் இருந்து பெறப்படும் பிளாஸ்மாவை வைத்து 20 பேருக்கு சிகிச்சையளிக்க முடியும். எனவே, ஏற்கெனவே குணமான நோயாளிகள் தங்களது பிளாஸ்மாவைத் தானம் செய்ய முன்வருமாறு அரசு மருத்துவமனைகள் வேண்டுகோள் விடுத்திருந்தன.
இதனை ஏற்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி, வில்லாபுரம் இப்ராஹிம் சுல்தான் சேட், காதர் பாட்சா ஆகியோர் டெல்லி தப்லீக் மாநாட்டிற்குச் சென்று வந்த மூவரை பிளாஸ்மா தானத்திற்காக இன்று அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் பெறப்பட்டது.
இதுகுறித்து வழக்கறிஞர் அன்புநிதி கூறுகையில், "இவர்கள் மூவரையும் 15 நாட்களுக்கு முன்பே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். இவர்களது ரத்த மாதிரியைப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். இவர்கள் பிளாஸ்மா தானம் செய்யத் தகுதியானவர்கள்தானா என்று ரிசல்ட் வரத் தாமதமானதால், இன்றுதான் தானம் கொடுக்க முடிந்திருக்கிறது. தற்போது அந்த டெஸ்ட் எடுக்கும் உபகரணங்களை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், அவை நாளையுடன் (30-ம் தேதி) காலாவதியாகும் உபகரணங்கள்.
பிளாஸ்மா தானம் விஷயத்தில் அரசு எவ்வளவு மெத்தனமாக இருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். தமிழகம் முழுக்க இதுவரையில் நாற்பதாயிரம் பேர் கரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள். நாங்களே மேலும் 6 பேரை பிளாஸ்மா தானத்திற்காகத் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்" என்றார்.
வழக்கறிஞர் அன்புநிதி தலைமையிலான தன்னார்வக் குழுவினர், பொதுமுடக்கம் அமலுக்கு வந்த நாள் முதல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மூன்று வேளை உணவையும் தரமாக, விலையில்லாமல் வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.