கரோனா பாசிட்டிவ் மனிதர்களைக் கலவரப்படுத்த வேண்டாமே; நம்பிக்கையோடு பேசி நலமாக்கலாமே!

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

மதுரை சொக்கிகுளம் சாலை. காலை 10 மணி இருக்கும். ஏழெட்டு அரசு வாகனங்கள் ஒரு வீட்டைச் சூழ்கின்றன. அதில் சைரன் வைத்த வாகனங்கள் இரண்டு. நிலவில் இறங்கும் விண்வெளி வீரர்களைப் போல உடையணிந்த நான்கு பேர். கையிலும் முகத்திலும் பாதுகாப்பு உறை அணிந்தவர்கள் பத்து பேர். இதென்னடா கூத்து என்று தெரு நாய்கள் எல்லாம் மிரண்டு போய்க் கத்துகின்றன. வழிப்போக்கர்களும் நின்று கவனிக்கிறார்கள். வந்தவர்களில் ஒருவர் ஒலி பெருக்கியில் அலறுகிறார். "சார், சீக்கிரம் கீழே வாங்க. உங்களுக்காக மொத்த டீமும் காத்துக்கிட்டு இருக்குது..." என்று.

இந்த அலப்பறையை வேடிக்கை பார்க்க உழவர் சந்தையில் காய்கனி வாங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் அடித்துப் பிடித்து ஓடிவருகிறார்கள். அழைத்துச் செல்லப்படும் நபரின் குடும்ப உறுப்பினர்களில் சிலர் கதறி அழுகிறார்கள். "எங்கள விட்டுப் போகாதீங்க" என்று. "யாரும் அவரைத் தொடாதீங்க தள்ளி நில்லுங்க... சமூக இடைவெளியைப் பின்பற்றுங்க" என்று மறுபடியும் ஒலிபெருக்கி அலறுகிறது.

அவரை அழைத்துச் சென்ற அடுத்த அரை மணி நேரத்தில் அந்தத் தெரு தகரத் தடுப்புகளால் அடைக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட வீட்டு வாசலில் ஸ்டிக்கர் ஒட்டி, எஞ்சியிருப்பவர்களைத் தனிமைப்படுத்துகிறார்கள். தெருவெல்லாம் பிளீச்சிங் பவுடரைத்தூவி, சோப்புத் தண்ணீர் - பினாயில் கலவையை தெளிக்கிறார்கள்.

உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆம், கரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல நமது உள்ளாட்சி அமைப்புகளும், சுகாதாரத் துறையும் கடைப்பிடிக்கும் நடைமுறைதான் இது. மற்றவர்களுக்கு வேண்டுமானால் வேடிக்கையாக இருக்கலாம். அந்த பாசிட்டிவ் மனிதரின் நிலையையும் அந்தக் குடும்பத்தின் நிலையையும் சற்று யோசித்துப் பாருங்கள். கரோனா சிகிச்சையில் இருப்பவர்களில் சிலர் தற்கொலைக்கு துணிவதற்கு இதுவும் ஒரு காரணமில்லையா?

8 மாதத்துக்கு முன்பு விபத்தில் காயமடைந்த நண்பர் ஒருவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அது சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனை. சிகிச்சையில் சேர்த்த பிறகு அவரிடம் இருந்து இரண்டு மூன்று குப்பிகளில் ரத்த மாதிரிகளைச் சேகரித்தார்கள். ஒவ்வொரு குப்பியையும் ஒவ்வொரு வார்டு எண்ணைச் சொல்லி அங்கு போய் கொடுக்கச் சொன்னார்கள். அதில் ஒரு எண், நம்பிக்கை (Integrated Counselling and Testing Centre) மையத்துக்குரியது. அங்கே போன என்னிடம், ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்து அதில் சிகிச்சைக்கு சேர்த்த நண்பரைப் பற்றிய முழு விவரம், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயர், தொடர்பு எண், முகவரி எல்லாவற்றையும் நிரப்பச் சொன்னார்கள்.

பத்து நிமிடக் காத்திருப்புக்குப் பிறகு ஆற்றுப்படுத்துநர் (கவுன்சிலர்) அறைக்குள் அனுப்பிவைக்கப்பட்டேன். "நீங்கள் யார்?" என்றதும் "சிகிச்சை பெறுபவரின் நண்பன்" என்றேன். "தயவுசெய்து அவரது மனைவியை வரச் சொல்லுங்கள்" என்றார்கள். "சார், அவரது மனைவி கைக்குழந்தையுடன் இருக்கிறார். மருத்துவமனைக்குள் அங்குமிங்கும் அலைக்கழித்தால் குழந்தை பாதிக்கப்படும். தயவுகூர்ந்து என்னிடமே பேசுங்கள்" என்றேன். "அது உங்களிடம் பேசும் விஷயமல்ல" என்று என்னை அனுப்பிவிட்டார்கள்.

பிறகு நண்பரின் மனைவிக்குக் கவுன்சலிங் கொடுத்தார்கள். அதாவது, "உங்கள் கணவரின் ரத்தத்தைப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். ஒருவேளை எச்ஐவி பாசிட்டிவ் என்று வந்துவிட்டால், அவரை வெறுத்துவிடாதீர்கள். எச்ஐவி பரவுவதற்குப் பாலியல் தொடர்பு மட்டும் காரணமல்ல. இப்போது அது உயிர்க்கொல்லி நோயுமல்ல. குடும்பத்தினர் எவ்வளவு ஆதரவாக இருக்கிறீர்களோ, அவ்வளவு காலம் அவர் நலமாக வாழ முடியும். அரசே மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்குகிறது" என்று நிறைய ஆலோசனைகளைச் சொல்லி, அவரை மனதளவில் தயார்படுத்தினார்கள். அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தொடங்கி அவர் எத்தனை ஆண்டுகள் சிகிச்சை பெற்றாலும் சரி அத்தனையும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்கள்.

பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்தாலும்கூட, இப்படி தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு கவுன்சலிங் கொடுத்துக்கொண்டே இருக்கிறது நம்பிக்கை மையம்.

இப்படி கரோனா பாசிட்டிவ் மக்களையும், அவர்களது குடும்பத்தினரையும் அணுகுவதில் என்ன சிக்கல்? ஏன், ஒருவருக்குக் கரோனா என்றதும் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும்? முன்கூட்டியோ பிறகோ அவருக்கும் குடும்பத்தினருக்கும் கவுன்சலிங் கொடுத்தால் என்ன?

"எச்ஐவி பாசிட்டிவ் எண்ணிக்கை மிகமிக குறைவு, கரோனா பாசிட்டிவ் அப்படியா?" என்று கேட்கலாம். சென்னை மண்டலத்துக்கு வெளியே தினமும் 200 தொற்றுகளுக்கும் குறைவாகத்தான் உறுதி செய்யப்படுகின்றன. எனவே, கொஞ்சம் முயன்றால் முடியும்.

ஒரு நோயை குணப்படுத்த மருந்து பாதி வேலையைத்தான் செய்யும். மீதி வேலையை நம்பிக்கைதான் செய்ய வேண்டும். இதையும் யோசிக்குமா அரசு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in