

வியாபாரிகளான தந்தை, மகன் மர்ம மரணத்தைத் தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீஸார் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக 30 போலீஸார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கடந்த 19-ம் தேதி இரவு ஊரடங்கு காலத்தில் நிர்ணயித்த நேரத்தைத் தாண்டி கடையை திறந்திருந்து வைத்திருந்ததாக கூறி போலீஸார் கைது செய்தனர்.
கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட இருவருக்கும் அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவரும் உயிரிழந்தனர்.
சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகன் இருவரையும் கொடூரமான முறையில் தாக்கியதால் தான் உயிரிழந்தனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய நான்கு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு புதிய ஆய்வாளராக, கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த எப்.பெர்னார்ட் சேவியரை நியமித்து திருநெல்வேலி சரக டிஐஜி பிரவின் குமார் அபிநபு நேற்று உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அனைத்து போலீஸாரும் கூண்டோடு மாற்றப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் புதிய உதவி ஆய்வாளர்களாக டி.மணிமாறன் (கோவில்பட்டி கிழக்கு), எஸ்.முத்துமாரி (புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம்), சிறப்பு உதவி ஆய்வாளராக டி.சுயம்புலிங்கம் (தட்டார்மடம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 7 தலைமைக் காவலர்கள், ஒரு பெண் தலைமைக்காவலர், 16 ஆண் காவலர்கள், 2 பெண் காவலர்களை புதிதாக நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் ஆய்வாளரையும் சேர்த்து சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு மொத்தம் 30 போலீஸார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.