

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக இன்று மூடப்பட்டது.
விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இதன் எதிரே மகப்பேறு மருத்துவ சிகிச்சைப் பிரிவும் இயங்கி வருகிறது. 3 மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் இச்சிகிச்சைப் பிரிவில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சைபெற்று வருகின்றனர். சிசேரியனும் இங்கு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாலும், பிரசவம் பார்த்த 4 பெண் மருத்துவர்கள் மற்றும் 4 செவிலியர்கள் மற்றும் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் 20 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனை இன்று திடீரென மூடப்பட்டது.
இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில், பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிரசவித்த பெண்களுக்கு கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
மேலும், பலருக்கு இந்த வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மகப்பேறு சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்படுகிறது. தற்போது சிகிச்சையில் உள்ள தாய்மார்கள் சிகிச்சை முடிந்த பின் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். பிரசவத்திற்கு வரும் தாய்மார்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
அதைத்தொடர்ந்து, மகப்பேறு சிகிச்சைப் பிரிவு அனைத்து பகுதிகளும் கிரிமிநாசினி மூலம் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படும் என்றனர்.