சமூக வலைதளங்களில் பரவுவது சாத்தான்குளம் வீடியோ அல்ல; தவறான செய்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் தவறான செய்திகளைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் தவறான செய்திகளைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை காவல்துறை இன்று (ஜூன் 29) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான செய்திகளையும் வதந்திகளையும் சம்பந்தமில்லாத வீடியோ போன்றவற்றையும் சிலர் பரப்பி வருவதாக புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையில், ட்விட்டர், முகநூல், யூ டியூப் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில் சிலர் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு அதை சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்துடன் இணைத்துப் பரப்பிவருவது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்படி வீடியோ குறித்து விசாரணை செய்ததில் அந்த வீடியோ 2019-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே நடைபெற்ற தனிநபர்கள் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ என்பதும் அதன்பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததும் தெரியவருகிறது.

எனவே, மேற்படி வீடியோவை எடுத்து சாத்தான்குளம் சம்பவத்துடன் சம்பந்தப்படுத்தி விஷமிகள் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருவது விசாரணையில் தெரியவருகிறது. எனவே, மேற்படி பதிவிட்டவர்களைக் கண்டுபிடித்து தக்க சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.

தனிநபர்கள் மற்றும் சமூகவலைதளக் குழுக்களில் தவறான தகவல்களை/ வதந்தியைப் பரப்புபவர்கள்/ பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in