Published : 29 Jun 2020 02:08 PM
Last Updated : 29 Jun 2020 02:08 PM

கேரளாவைப் போல தமிழகத்திலும் 6 மாதகால இ-பாஸ் கிடைக்குமா?- எல்லையோர மக்களின் எதிர்பார்ப்பு

கோயம்புத்தூர்

கேரள - தமிழக எல்லைகளில் இருபுறமும் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், உறவு ரீதியாக மட்டுமல்ல, தொழில் ரீதியாகவும் தொடர்புடையவர்கள். பொது முடக்கத்தால் எல்லைகள் மூடப்பட்டதால் இந்த கிராம மக்கள் பெரும் சிரமத்தில் ஆழ்ந்தனர்.

குறிப்பாக, பொள்ளாச்சி, கோவையிலிருந்து செல்லும் கேரள எல்லைப் பகுதியான ஆனைகட்டி, வேலந்தாவளம், நடுப்புணி, கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள், அம்மாநிலத்துக்குள் சென்று பணிபுரிய முடியாத சூழல் நீடித்தது.

இ-பாஸ் பெற்றிருந்தாலும் இந்தப் பகுதி சோதனச் சாவடி வழியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாளையாறு எல்லை சோதனைச் சாவடி வழியாக மட்டுமே நுழைய முடிந்தது. இதனால் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிராமத்திற்குச் செல்லக்கூட இப்பகுதி மக்கள் 80- 100 கிலோ மீட்டர் சென்று சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண கேரள மாநில பாலக்காடு மாவட்ட நிர்வாகம் விதிமுறைகளைத் தளர்த்தியது. வியாபாரம், தொழில் நிமித்தம் செல்பவர்கள் இருவேறு பகுதியில் உள்ள வசிப்பிட மற்றும் தொழிற்கூட ஆதாரங்களைச் சமர்ப்பித்து 6 மாதங்களுக்கான இ-பாஸ் பெறலாம் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ‘6 மாத கால பாஸ் நடைமுறையைக் கேரளா பின்பற்றுவது போல் தமிழகம் பின்பற்றுவதில்லை. தமிழகத்தில் விண்ணப்பித்தால் 4 நாட்களுக்கான பாஸ் மட்டுமே கிடைக்கிறது’ என்று இரு தரப்பிலிருந்தும் குரல்கள் எழுகின்றன.

இதுகுறித்து எட்டிமடையைச் சேர்ந்த குவாரித் தொழிலாளி சண்முகம் கூறும்போது, “நான் எட்டிமடையிலிருந்து வேலந்தாவளம் வழியே கேரளத்தில் நுழைந்து அங்குள்ள உழல்பதியில் குவாரி பணி செய்து வருகிறேன். 3 மாதங்களாகக் கேரளத்துக்குள் சென்று வர முடியாத நிலை. இதனால் வேலையே கிடைக்காமல், வருமானம் இல்லாமல் இருந்தேன். சமீபத்தில்தான் கேரளத்தில் 6 மாதங்களுக்கான ரெகுலர் இ-பாஸ் பெற்று வேலைக்குச் செல்கிறேன். இந்த பாஸை வைத்து கேரள போலீஸாரிடம் அனுமதி பெற்று அங்கே சென்று வரலாம். ஆனால், தமிழ்நாட்டிற்குள் இது செல்லாது.

இங்குள்ள சோதனைச் சாவடி போலீஸார், கோவை மாவட்ட ஆட்சியர் அனுமதிக்கும் பாஸ் வேண்டும் என்று கேட்கிறார்கள். அதற்கு விண்ணப்பித்தால் 4 நாளைக்கான அனுமதி மட்டுமே கிடைக்கிறது. அது முடிந்ததும் மீண்டும் பாஸ் வாங்க வேண்டியுள்ளது. அதனால் கேரளத்தைப் போல் தமிழத்திலும் 6 மாதகாலம் இ-பாஸ் வழங்க வேண்டும் எனக் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x