

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரங்களில் ஒன்றான கோவையில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சாலை விதிமீறல்கள், விபத்துகளும் அதிகரிக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த மாநகரப் போக்குவரத்துக் காவல்துறையினர் முக்கிய இடங்களில் சிக்னல்கள் அமைத்தும், வாகனத் தணிக்கை மேற்கொண்டும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 52-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. இதில் லட்சுமி மில் சந்திப்பு, ராமநாதபுரம் சந்திப்பு, காந்திபுரம் நூறடி சாலை சந்திப்பு, சிங்காநல்லூர் சந்திப்பு, பீளமேடு சந்திப்பு, வடகோவை சிந்தாமணி சந்திப்பு போன்ற அதிக அளவில் வாகன போக்குவரத்து மிகுந்த சிக்னல் சந்திப்புகளும் அடங்கும்.
சிக்னல்களில் சிவப்பு விளக்கு ஒளிரும்போது, சில இடங்களில் 25 விநாடிகள், சில இடங்களில் 60 விநாடிகள், சில இடங்களில் இதற்கும் மேலே என்ற அளவில் நேரக் கட்டுப்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது. தானியங்கி முறையில் இயங்கும் போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு ஒளிரும்போது இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என அந்த இடத்தில் அனைத்து வாகன ஓட்டுநர்களும் இடைவெளியின்றி தேங்கி நிற்கின்றனர்.
ஆனால், தற்போது கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் வேளையில், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல் முக்கியத் தடுப்பு நடவடிக்கையாக உள்ள சூழலில், மாநகரில் பல்வேறு இடங்களில் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது வாகன ஓட்டுநர்கள் இடைவெளியின்றி இவ்வாறு தேங்கி நிற்பது தொற்றுப் பரவலுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இது தொடர்பாக ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்குமார் என்பவர் கூறுகையில், "போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது, வாகன ஓட்டுநர்கள் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்த வேண்டும். சிக்னல்களில் அதிக நேரம் வாகன ஓட்டுநர்கள் தேங்குவதைத் தடுக்க, சிவப்பு விளக்கு ஒளிரும் விநாடியைக் குறைக்க வேண்டும்" என்றனர்.
காவல்துறையினர் மூலம் இயக்கப்படும் சிக்னல்
இது தொடர்பாக மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, "முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, பின்னர் அதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட முதல் சில நாட்கள் வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. ஆனால், பின்னர் வாகனப் போக்குவரத்து அதிகரித்துவிட்டது. சிக்னல்களில் சிவப்பு விளக்கு ஒளிரும்போது, வாகன ஓட்டுநர்கள் இடைவெளியின்றி நிற்கின்றனர். இதைத் தடுக்க சாலைகளில் குறியீடு வரைவது போன்றவை பயன்தராது.
அதற்குப் பதில் அந்த சிக்னலுக்கு உட்பட்ட இடத்தில் பணியாற்றும் போக்குவரத்துக் காவலர் வாகன ஓட்டுநர்கள் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என வலியுறுத்துகிறார். முன்பு குறிப்பிட்ட விநாடிகள் என நேரம் குறிப்பிட்டால் தானியங்கி முறையில் சிக்னல்கள் இயங்கி வந்தன. ஆனால், மாநகரில் கடந்த சில வாரங்களாக பெரும்பாலான சிக்னல்களில், குறிப்பாக அதிக வாகனப் போக்குவரத்து நிறைந்த சந்திப்புகளில் உள்ள சிக்னல்களில் தானியங்கி முறை நிறுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பதில் அங்குள்ள போக்குவரத்து காவலர்கள் சிக்னல்களை இயக்குகின்றனர்.
எந்தப் பக்கமும் வாகன ஓட்டுநர்கள் அதிக அளவில் தேங்காத வகையில் சுழற்சி முறையில் குறிப்பிட்ட விநாடிகள் மட்டும் சிவப்பு விளக்கு ஒளிரும் வகையில் அவர் சிக்னல்களை இயக்குகிறார். இதனால் வாகன ஓட்டுநர்கள் சிக்னல்களில் அதிக நேரம் நிற்பது தவிர்க்கப்படுவதோடு, வாகனத் தேக்கம், போக்குவரத்து நெரிசல், தொற்றுப் பரவல் தடுக்கப்படுகிறது" என்றனர்.