நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகங்கள்: வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?- மருத்துவர் தீபா விளக்கம்

மருத்துவர் தீபா
மருத்துவர் தீபா
Updated on
1 min read

கரோனாவை எதிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது குறித்தும் அதற்கான இயற்கை பானகத்தைத் தயாரிப்பது பற்றியும் மருத்துவர் தீபா விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியரும் துறைத் தலைவருமான மருத்துவர் வை.தீபா, ''யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலம் உடலில் இயல்பாகவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். இயற்கை மருத்துவ முறைப்படி இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள், துளசி, அதிமதுரம் கலந்த பானகங்களைத் தயாரித்துப் பருகுவது அவசியம்.

இந்த இயற்கை பானகத்தை எளிமையாக வீட்டில் இருந்தபடியே தயாரிப்பது எப்படி?
வைட்டமின் சி நிறைந்துள்ள பெரிய நெல்லிக்காய் 50 மில்லி,
துளசி இலைச் சாறு - 20 இலை அல்லது 20 மில்லி,
இஞ்சிச் சாறு - 50 மில்லி,
எலுமிச்சைச் சாறு - 5 மில்லி,
தண்ணீர் - 150 மில்லி,
மஞ்சள்- கால் டீஸ்பூன்

இதைக் கலந்து காலையில் 200 - 250 மில்லி அளவு பெரியவர்களும் 100- 150 மில்லி சிறியவர்களும் குடிக்கலாம்.

தினசரி காலை, மாலை இரு வேளைகள் இதைத் தாராளமாக எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

இதனுடன் சூடான பானகம் ஒன்றையும் தயாரித்துக் குடிக்கலாம்.
அதிமதுரம் - 5 கிராம் அல்லது கால் டீஸ்பூன்
மஞ்சள்- கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சிச் சாறு - 50 மில்லி
துளசி இலைகள் - 10

ஆகியவற்றைச் சேர்த்து 100 மில்லி தண்ணீரில் 2- 3 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.

அதிமதுரத்தில் உள்ள பைட்டோகெமிக்கல்ஸ் கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடுகின்றன. உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டாலும் தொற்று ஏற்படாமல் இருக்க இஞ்சியில் உள்ள நுண்பொருட்கள் உதவுகின்றன. மாலை வேளையில் இந்தப் பானகத்தை 100- 150 மில்லி தினந்தோறும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தப் பானகம் உயிரிழப்பு அதிகம் ஏற்படக் கூடிய உயர் ரத்த அழுத்த, நீரிழிவு நோயாளிகளின் ரத்த அழுத்த அளவையும் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது. கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

பொதுவாக வைட்டமின் சி நிறைந்த உணவுகளைச் சேர்த்தாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்’’ என்றார் மருத்துவர் தீபா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in