

சாத்தான்குளம் காவல் நிலைய மரணத்திற்கு காரணமானவர்களுக்குக் கொடுக்கப்படும் மிகக் கடுமையான தண்டனை, மனித உரிமையை மீற நினைப்போரை எச்சரிக்கும் பாடமாக அமைய வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 29) தன் ட்விட்டர் பக்கத்தில், "சாத்தான்குளம் காவல் நிலைய மரணங்கள் மன்னிக்க முடியாதவை; மனிதத் தன்மையற்றவை. அதற்குக் காரணமானவர்களுக்கு சட்டப்படி மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மனித உரிமையை மீற நினைப்போரை எச்சரிக்கும் பாடமாக அமைய வேண்டும்!
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்புக்குக் காரணமானவர்கள் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்து வழக்கையும், குற்றவாளிகளையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.