ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் எப்படிக் கணக்கிடப்படுகிறது?- எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு 

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் எப்படிக் கணக்கிடப்படுகிறது?- எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு 
Updated on
1 min read

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என மனுதாரரும், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகமும் எழுத்துபூர்வ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்குச் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சாரக் கணக்கீடு செய்யும்போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சாரப் பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையைக் கழித்துவிட்டு, மீதத் தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்து, முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி ‘பில்’லாகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான ‘பில்’லாகவும் நிர்ணயித்து தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில், வீடுகளில் மின் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள முடியாவிட்டால் முந்தைய மாதக் கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க விதிகள் உள்ளதாகவும், கட்டண நிர்ணயத்தில் விதிமீறல் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது குறித்து இரு தரப்பும் எழுத்துபூர்வமான வாதங்களாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூலை 6-ம் தேதிக்குத் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in