Published : 29 Jun 2020 12:51 PM
Last Updated : 29 Jun 2020 12:51 PM

நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசைக் கலைஞர்களுக்கும் நலவாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை

கரோனா ஊரடங்கால் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ள நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்குத் தனி நல வாரியம் தொடங்கி, நிவாரண உதவி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கரோனோ பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கோயில்கள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை குறைந்த நபர்களுடன் நடத்த மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மங்கல இசைக் கருவிகளை வாசிக்கும் நாதஸ்வரம் தவில் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள், கரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவைக் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் குகேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளதுபோல, நாதஸ்வரம், தவில், மிருதங்கம், வயலின், வீணை வாசிக்கும் இசைக் கலைஞர்களுக்கும், பரதநாட்டியக் கலைஞர்களுக்கும் என தனியாக நலவாரியம் அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி கோரி ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குடன் இணைத்து விசாரிப்பதற்காக வழக்கை ஜூலை 1-ம் தேதிக்குப் பட்டியலிட உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x