ஊரடங்கால் வெளிமாநில வியாபாரிகள் வராததால் விலை குறைந்தது: திண்டுக்கல் சிறுமலை திராட்சை விவசாயிகள் வேதனை

ஊரடங்கால் வெளிமாநில வியாபாரிகள் வராததால் விலை குறைந்தது: திண்டுக்கல் சிறுமலை திராட்சை விவசாயிகள் வேதனை
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை அடிவாரம் பகுதிகளில் பன்னீர்திராட்சை அறுவடை தொடங்கியுள்ளநிலையில் வெளிமாநில வியாபாரிகள் வாங்கிச்செல்ல வராததால் விலை குறைந்து விற்பனையாவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவாரப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் விளையும் திராட்சைக்கு தனி சுவை உண்டு என்பதால் கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆண்டுதோறும் அறுவடை காலத்தில் தோட்டத்திற்கு வந்து அதிகளவில் மொத்தமாக வாங்கிச்செல்வர்.

தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வந்துசெல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் திராட்சைகளை உள்ளூர் மார்க்கெட்டிலேயே விற்பனை செய்யவேண்டியநிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு போதுமான மழை பெய்ததால் விளைச்சல் அமோகமாக உள்ளது. தற்போது அறுவடை தொடங்கியுள்ளநிலையில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் அருகே ஊத்துப்பட்டியை சேர்ந்த திராட்சை விவசாயி தினேஷ்குமார் கூறுகையில்,

கரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநில வியாபாரிகள் திராட்சைகளை வாங்கிச்செல்ல வரவில்லை. இதனால் ஒரு கிலோ திராட்சை ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையாகவேண்டிய திராட்சை பழங்கள் விலை வெகுவாக குறைந்து தற்போது ஒரு கிலோ ரூ.40 க்கு விற்பனையாகிறது.

இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பிவைத்து நல்லவிலை கிடைக்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in