சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை: நாடாளுமன்றக்குழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்; பிரகாஷ் ஜவடேகருக்கு அன்புமணி கடிதம்

அன்புமணி: கோப்புப்படம்
அன்புமணி: கோப்புப்படம்
Updated on
1 min read

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை நாடாளுமன்றக்குழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிமுறைகளைத் தளர்த்தத் திட்டமிட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அதற்கான வரைவு அறிவிக்கையை மக்களின் கருத்துகளைக் கேட்டறியும் நோக்கத்துடன் கடந்த மார்ச் 12 ஆம் தேதி அதன் இணையதளத்தில் வெளியிட்டது. மே மாதம் 10 ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சுற்றுச்சூழல் வல்லுநர்களின் வலியுறுத்தலின்படி, கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30-ம் தேதி (நாளை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை மீதான தமது கருத்துகளை விளக்கி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 29) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அத்துடன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த தமது ஆலோசனைகளையும் அன்புமணி வழங்கியுள்ளார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்: கோப்புப்படம்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்: கோப்புப்படம்

அதில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கடுமையான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை உருவாக்குவதற்கு பதிலாக, ஏற்கெனவே உள்ள விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்வதாக உள்ளது என, அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் நிறுவனங்கள் இயற்கை வளஙக்ளைச் சுரண்டுவதற்கு இந்த வரைவு அறிவிக்கை வழிகோலுவதாகக் குறிப்பிட்டுள்ள அன்புமணி, பாதுகாப்பு சம்பந்தப்பட்ட திட்டங்களுக்குப் பசுமை தீர்ப்பாயத்தின் ஒப்புதல் கட்டாயம் என்ற விதியை நீக்கியிருப்பது மிகவும் ஆபத்தானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இயல்புநிலை திரும்பும்வரை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையையும், அதன் மீதான நடவடிக்கைகளையும் கிடப்பில் போட வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைகளுக்கான நாடாளுமன்றக்குழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in