

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட அவரது வீட்டிலுள்ள 52 பேருக்கும் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கரோனா தொற்றில்லை என்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690 ஆக உள்ளது. தற்போது, மருத்துவமனையில் 417 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 262 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்றால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் முதல்வர் அலுவலக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதியாகி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, சட்டப்பேரவை வளாகம் இரு நாட்களுக்கு மூடப்பட்டது. நேற்று (ஜூன் 28) மாலை முதல்வர் நாராயணசாமி மற்றும் அவர் வீட்டில் இருப்போர், அங்கு பணியில் இருப்போர், அவரது பாதுகாவலர்கள் ஆகியோருக்கு கரோனா தொற்று உள்ளதா என்று உமிழ்நீர் பரிசோதனை எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமாரிடம் கேட்டதற்கு, "புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இச்சூழலில் நேற்று முதல்வரின் பாதுகாவலரின் தந்தைக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதனால் முதல்வர் வீட்டில் இருப்போர், அங்கு பணிபுரிவோர், முதல்வரின் பாதுகாவலர்கள் ஆகியோருக்கு உடனடியாக கரோனா தொற்று பரிசோதனை எடுத்தோம்.
முதல்வர் நாராயணசாமி உட்பட அவரது வீட்டில் இருந்தோர், பணிபுரிவோர் என 52 பேருக்கு முதல்கட்டமாக முடிவுகள் வந்துள்ளன. அவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன.
குறைந்தபட்சம் ஒருவார காலத்துக்கு முதல்வரைத் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. முதல்வரின் பாதுகாவலர்கள் 32 பேருக்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதற்கான முடிவுகள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.