சாலைகளில் உலவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்கள்; அச்சத்தில் குடியிருப்புவாசிகள்- புகார் எண்கள் வெளியீடு

சாலைகளில் உலவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்கள்; அச்சத்தில் குடியிருப்புவாசிகள்- புகார் எண்கள் வெளியீடு
Updated on
2 min read

கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சாலைகளில் சுதந்திரமாக உலவி வருவதால் அக்கம், பக்கத்துக் குடியிருப்புவாசிகள் கரோனா அச்சத்தில் உள்ளனர். இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியில் நடமாடுவதைக் கண்காணித்துத் தடுக்க சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா? என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 428 ஆக உயர்ந்துள்ளது. 177 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 249 பேர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வந்தவர்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் என சுமார் 11 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளில் சுகாதாரத்துறையினர் 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதேபோல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தடையை மீறி வெளியில் வந்து செல்வதால், கரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சுகின்றனர், அக்கம் பக்கத்தினர். இது குறித்து கோவை ரத்தினபுரியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு அருகில் வசிப்பவர்கள் சிலர் கூறியதாவது:

“தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், பரிசோதனை முடிவுகளை அறியும் வரையிலோ, தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடைந்து வீடு திரும்பிக் குறிப்பிட்ட சில நாட்கள் வரையிலோ வெளியில் நடமாடக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்திச் செல்கின்றனர்.

இதைத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் கடைப்பிடிப்பதில்லை. அத்தியாவசியப் பொருட்கள் வாங்கக் கடைகளுக்குச் சென்று வருவது, காலை அல்லது மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது என சுதந்திரமாக வெளியில் உலாவுகின்றனர்.

கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் தொடர்பில் இருந்த அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு, அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இதுபோன்ற தனிமைப்படுத்தப்பட்ட குடியிருப்புகளின் அருகில் வசிப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணித்து அவர்களில் வெளியில் நடமாடுவதைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் வெளியில் நடமாடக் கூடாது. இதனால் மற்றவர்களுக்குத் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அக்கம், பக்கத்தில் இருப்போருக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது. தங்களுக்கு வேண்டிய அத்தியாசியப் பொருட்களை மற்றவர்கள் மூலமாக வாங்கி வரச் செய்து, வாசலில் வைத்துவிட்டுச் செல்லச் சொல்வதுடன், அவர்கள் சென்ற பிறகே அப்பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் வெளியில் நடமாடியதால், மற்றவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டால் கடும் நடவடிக்கை ஏற்படும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெளியில் நடமாடுவதை அறிந்தால் '1077', என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். 0422-2301114, 9499933870 என்ற எண்களிலும் புகார் தெரிவிக்கலாம்' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in