சிறையில் தந்தை - மகன் மரணம்: சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும்; கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்
கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்
Updated on
1 min read

மத்திய புலனாய்வுத்துறையில் சில வழக்குகளில் நியமிப்பதைப் போல சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து நீதிமன்ற கண்காணிப்பில் சாத்தான்குளம் படுகொலை வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூன் 29) வெளியிட்ட அறிக்கை:

"சாத்தான்குளத்தில் காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலில் தந்தை, மகன் இறந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். காவல்துறையினர் செய்த குற்றங்களை பாதுகாக்கிற வகையில் சிபிஐ விசாரணை அமைந்துவிடக் கூடாது. ஏற்கெனவே தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக சிபிஐ விசாரணையின் மூலம் ஒரு குற்றவாளி மீது கூட வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மிகவும் மந்தமான முறையில் குற்றவாளிகளை பாதுகாக்கிற வகையில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. அத்தகைய கண்துடைப்பு நாடகம் சாத்தான்குளம் படுகொலையிலும் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

எந்தக் குற்றத்தையும் செய்யாத வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலைக்குக் காரணமான காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்படி உடனடியாக கொலை வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும்.

காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டவர்களிடம் எந்தவித விசாரணையும் நடத்தாமல் சிறைக்காவலுக்கு உத்தரவிட்ட சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கிய அரசு மருத்துவர் ஆகியோர் தங்களது பணியிலிருந்து கடமை தவறிய காரணத்தால் அவர்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம் சிறைக்காவல் மரணங்கள் தொடர்பாக விதித்திருக்கும் நெறிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டிருக்கிற இவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்தால்தான் சிபிஐ விசாரணையில் நீதி கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

மேலும், மத்திய புலனாய்வுத்துறையில் சில வழக்குகளில் நியமிப்பதைப் போல சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து நீதிமன்ற கண்காணிப்பில் சாத்தான்குளம் படுகொலை வழக்கு விசாரிக்கப்பட வேண்டும். இல்லையென்று சொன்னால் கொலைக்குக் காரணமான குற்றவாளிகள் தப்பிவிப்பதற்கு தமிழ்நாடு அரசு துணை போகிறது என்ற குற்றசாட்டை நான் கூற விரும்புகிறேன். இத்தகைய கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் சாத்தான்குளம் படுகொலைக்கு நீதி கிடைக்கும் என்பதை தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்"

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in