Published : 29 Jun 2020 07:40 AM
Last Updated : 29 Jun 2020 07:40 AM

தலைவாசல் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவில் மருத்துவக் கல்லூரி: கட்டுமானப் பணி பிப்ரவரியில் நிறைவடையும் முதல்வர் பழனிசாமி தகவல்

சேலம் மாவட்டம் தலைவாசலில் கட்டப்பட்டு வரும் சர்வதேச ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை முதல்வர் பழனிசாமி, நேற்று ஆய்வு செய்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த கால்நடைப்பூங்காவின் மாதிரி வடிவத்தை பார்வையிட்டார். உடன் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

சேலம்

தலைவாசல் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவில் அமைக்கப்படும் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டுமானப் பணிகள் வரும் பிப்ரவரியில் முடிக்கப்பட்டு, அவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகள், 20 பேரூராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 1,345 ஊரகக் குடியிருப்பு பகுதிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தில், சேலம் அம்மாப்பேட்டை நீருந்து நிலையத்தில் இருந்து, மேட்டுப்பட்டி தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி வரை உள்ள பழைய சிமென்ட் குழாய்களை ரூ.19.17 கோடியில் புதிய இரும்புக் குழாய்களாக மாற்றி அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டியில் நேற்று நடைபெற்றது.

இப்பணிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர், சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோட்டில் அமைக்கப்படும் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவில், கட்டப்பட்டு வரும் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டுமானப் பணிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தலைவாசலில் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. கால்நடைப் பூங்கா அமைக்க, ஒட்டுமொத்தமாக ரூ.1,022 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பூங்காவுக்காக, தற்போது வரை 1,102 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

20 வகையான கட்டிடங்கள்

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டிடம் கட்டும் பணியில், நிர்வாக அலுவலகக் கட்டிடம், கல்வி சார் வளாகங்கள்-8, நூலகம், மாணவ, மாணவியர் விடுதி, இறைச்சி அறிவியல், பால் அறிவியல், கால்நடைப் பண்ணை வளாகம், முதல்வர் குடியிருப்பு என 20 வகையான கட்டிடங்கள் மொத்தம் 3,72,473 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டு வருகின்றன.

இப் பணிகள் வரும் ஆண்டு பிப்ரவரியில் முழுமையாக முடிக்கப்பட்டு. பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும், கால்நடைப் பூங்காவுக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.270 கோடியில் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் முடிக்கப்படும்.

கரோனா தொற்று

சேலத்தில் கரோனா தொற்று அதிகமாக இல்லை. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களில் 310 பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 213 பேர், வேறு மாவட்டங்களில் இருந்து வேலைக்குச் சென்று திரும்பியவர்கள் 214 பேர் உட்பட 818 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 437 பேர், இதுவரை சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 379 பேர், 2 பேர் உயிரிழந்தனர். எனவே, சேலத்தில் தொற்று அதிகமாக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், கோவை மண்டல ஐஜி பெரியய்யா, எஸ்பி தீபா காணிகர், கூட்டுறவு வங்கி மாநிலத் தலைவர் இளங்கோவன், எம்எல்ஏ-க்கள் மருதமுத்து, சின்னதம்பி, சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x