

கரோனா ஊரடங்கு காலத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மேம்பாலங்கள் கட்டுதல், ரயில் பாதைகளை மின்மயமாக்குதல் என 200 முக்கிய திட்டங்களை ரயில்வே நிறைவேற்றியுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்னமும் தொடர்கிறது. இதனால், பயணிகள் ரயில்களின் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், சில வழித்தடங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்திக் கொண்டு ரயில்வே நாடுமுழுவதும் நீண்ட நாட்களாக இருந்த ரயில் திட்டப் பணிகளை வேகமாக நிறைவேற்றி வருகிறது.
அதன்படி, 82 பாலங்கள் புனரமைப்பு, 48 லெவல் கிராசிங்குகளை அகற்றிவிட்டு சுரங்கப்பாதை, 16 நடை மேம்பாலங்களை கட்டியது. பழைய நடை மேம்பாலங்களை அகற்றுவதற்கான 14 திட்டங்கள், சாலை மேம்பால திட்டங்கள் 7, யார்டு மறுவடிவமைப்பு திட்டங்கள் 5 மற்றும் 26 பிற திட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஜோலார்பேட்டை யார்டு மாற்றம்
சென்னை கோட்டத்தில் ஜோலார்பேட்டையில் யார்டு மாற்றப்பட்டதால் ரயில் பாதையின் வேகம் 60 கி.மீ வரை மேம்பட்டுள்ளது. அதேபோல் லூதியானா ரயில் நிலையத்தில் கைவிடப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த 135 மீட்டர் நீளம் கொண்ட நடை மேம்பாலத்தை அகற்றியுள்ளனர். கரோனா ஊரடங்கு காலத்தில் இதுவரை மொத்தம் 200 ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.