Published : 29 Jun 2020 07:14 AM
Last Updated : 29 Jun 2020 07:14 AM

133 கி.மீ. தொலைவுக்கு ரூ.12,301 கோடியில் அமைகிறது; மாமல்லபுரம் - எண்ணூர் சுற்றுவட்டச் சாலை: நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரம்

கோப்புப் படம்

சென்னை

ஊரடங்கு நிலவும் சூழலில் மாமல்லபுரம் - எண்ணூர் துறைமுகம் இடையே ரூ.12 ஆயிரத்து 301 கோடியில் சென்னை சுற்றுவட்டச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை மாநிலநெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்தி வருகிறது.

6 வழிச்சாலை

சென்னை மாநகரை ஒட்டியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, புறநகர் பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் வராமலே செல்ல மேலும் ஒரு சுற்றுவட்டச் சாலையை அமைக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.

மாமல்லபுரத்தில் தொடங்கி எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் வகையில் 133 கிமீ தொலைவுக்கு இச்சாலை அமைக்கப்படவுள்ளது. தச்சூர், திருவள்ளூர், பெரும்புதூர், சிங்கப்பெருமாள் கோயில் வழியாக கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் இச்சாலை 6 வழிச்சாலையாகவும், இருபுறமும் சர்வீஸ் சாலைகள்,பாதசாரிகளுக்கான நடைபாதைகொண்டதாகவும் அமைக்கப்படஉள்ளது.

மத்திய - மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் ஜப்பான் நாட்டின் சர்வதேச கூட்டுறவு நிறுவனம்,ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவிமூலம் இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. பல்வேறு காரணங்களால் இத்திட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது, இந்த பிரச்சினை முடிவடைந்துள்ள நிலையில், சென்னை சுற்றுவட்டச் சாலையை அமைப்பதற்கான பணியில் தமிழக நெடுஞ்சாலைத் துறை தீவிரம் காட்டி வருகிறது.

803 ஹெக்டர் நிலம்

இதுதொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்த திட்டத்துக்கு மொத்தம் 803 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. அந்தந்த பகுதிகளில் தேவைக்கு ஏற்றவாறு, படிப்படியாக நிலம்கையகப்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்பட்டு வருகிறது.

நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடையும்போது, படிப்படியாக சாலை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் தென் மாவட்டங்களில் இருந்து வரும் கனரக வாகனங்களும், கிழக்கு கடற்கரை சாலைவழியாக வரும் கனரக வாகனங்களும் சென்னை நகருக்குள் வராமல் எண்ணூர் துறைமுகத்தை சென்றடைய முடியும்’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x