

கோவையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவையில் இன்றைய நிலவரப்படி (28-ம் தேதி) 460 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று மட்டும் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் குறிப்பிட்ட சதவீதத்தினர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார். அதாவது, பீளமேடு பெரியார் காலனியில் 17 பேர், ஆடீஸ் வீதியில் 3 பேர், துடியலூர் முருகன் நகரில் 3 பேர், செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டில் 2 பேர், ஒலம்பஸ் பகுதியில் 3 பேர், துடியலூர்் ஜோதிபுரத்தில் 2 பேர், பீளமேடு ஆவாரம்பாளையம் சாலை, லட்சுமிபுரம், நேரு நகர், கெம்பட்டி காலனி, சேரன் மாநகர், இடையர்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். மாநகரில் மட்டும் 11-க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாநகரில் அதிகரிக்கும் கரோனா தொற்றை தடுக்க கிருமிநாசினி தெளித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட நோய் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியதோடு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டோரை கண்டறிந்து அவர்களுக்கும் தொற்று உள்ளதா, இல்லையா என்பதை கண்டறிய பரிசோதிக்கின்றனர். தவிர, வீடு வீடாக நேரடியாக சென்றும் குடும்பத்தினருக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா என்பது போன்றவை குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மாநகரில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக கோவை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் கூறும்போது,‘‘ மாநகரில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அடுத்ததாக அவர்கள் வசிக்கும் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பின்னர், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, மாநகரில் இன்று ஒருநாள் மட்டும் 1,268 பேருக்கு கரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இதி்ல் கோவை ரயில் நிலைய வளாகத்தில் 67 பேருக்கும், கணபதி நேருநகரில் 70 பேருக்கும், மேட்டுப்பாளையம் அண்ணா மார்க்கெட்டில் 538 பேருக்கும், குனியமுத்தூர் அருகேயுள்ள பி.கே.புதூரில் 256 பேருக்கும், உக்கடம் மீன் மார்க்கெட்டில் 185 பேருக்கும், காந்திபார்க் பகுதியில் 152 பேருக்கும் கரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது,’’ என்றனர்.