

சென்னையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் மருத்துவ திரவக் கழிவு களை கையாளும் நடைமுறைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப் பாயம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஜவஹர்லால் சண்முகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ திரவக் கழிவுகளை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் இல்லை. அதனால் மருத்துவ திரவக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் சென்னை குடிநீர் வாரிய கழிவுநீர் குழாயில் விடப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் அரசு விதிகளின்படி அனைத்து மருத்துவமனைகளிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.
இந்த மனுவை விசாரித்த அமர்வு, தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், மருத்துவ திரவக் கழிவுகளை கையாளும் நடைமுறை மற்றும் எத்தனை மருத்துவமனைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு சுகாதாரத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் பி.ஜோதிமணி, தொழில் நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கிரிஜா வேல்முருகன் ஆஜரானார்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். அதனைத் தொடர்ந்து, முதலில் சென்னையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளின் நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப் பினர்கள், மனு மீதான அடுத்த விசாரணையை அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.